இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவுடன் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை அறிமுகம் செய்தன. அன்றாடம் 100 சேதி என்கிற வரம்பு நீக்கப்பட்டு வரம்பற்ற சேதிச் சேவையும் இனி கிடைக்க உள்ளது. 08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எந்த கட்டண வகையிலும், தரவுகள் வழங்குவதற்கு ஒரு வரம்பு, குரல் அழைப்பிற்கான ஒரு வரம்பு மற்றும் பயனர்களின் சேதிச் சேவைக்கான ஒரு வரம்பு என்று அனைத்திற்கும் ஒரு வரம்பு அளவை வைத்திருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் வரம்பிற்குள் சேவையைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஆனாலும், இது அப்படியே நின்றுவிடவில்லை. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவுடன் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை அறிமுகம் செய்தன. அதனைத் தொடர்ந்து தற்பொழுது மற்றொரு சேவைக்கும் விதிக்கப்பட்டிருந்த வரம்பையும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அது அன்றாடம் 100 சேதி என்கிற வரம்பு. அன்றாடம் வழங்கப்பட 100 சேதிகளின் வரம்பு தீர்ந்த பின்னர், அனுப்பும் ஒவ்வொரு சேதிக்கும் 50 காசு என்கிற கட்டணம் தற்பொழுது வரை வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனிமேல் அந்த கவலை இல்லை. இனிமேல் புலனச் (வாட்ஸ்அப்) செயலியில் வரம்பில்லாமல் தகவல் அனுப்புவது போல, வரம்பே இல்லாமல் ஒரு நாளைக்கு எத்தனை சேதிகளை வேண்டுமானாலும் அனுப்பிக்கொள்ளலாம் என்று, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோரப்படாத வணிகத் தொடர்பு அல்லது போலி அழைப்புகள் மற்றும் செய்திகளின் சிக்கலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தின் கீழ், குறைந்தபட்ச தொகையாக ஒரு சேதிக்கு 50 காசுகள் என்கிற கட்டணத்தை விதித்து, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிமுகமும் செய்தது. தற்போது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், வணிகச் சேதிகள் மற்றும் அழைப்புகளுக்கு நிறுவனங்கள் தங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த முறை அமுல்படுத்திய நிலையில் தனி நபர் சேதிச் சேவையை கட்டுப்படுத்தத் தேவையில்லை என்பதாக இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் நம்புகிறது. எனவே அன்றாடச் சேதிச் சேவைகளுக்கான வரம்பை நீக்கி உத்தரவிட்டுள்ளது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



