காவிரி கழிமுக மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட முன்வரைவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று பதிகை செய்தார். 08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகினரின் வாழ்க்கை முறை- ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தே அந்தந்த மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழர்கள், அகவாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்கும் இலக்கணம் என்கிற காப்பியம் (காப்புக் கோட்பாடுகளைக்) கட்டமைத்துக் கொண்டு பல்லாயிரம் அண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்கள். அது குடும்பத்திலும், சமுதாயத்திலும் நடைமுறையில் இருந்து கொண்டு இருக்கிறது. எடுத்துக்காட்டாக பொங்கலின் போது காப்பு கட்டுவது, கோயில் திருவிழாக்களின் போது காப்பு கட்டுவது, தாய்மையுற்ற பெண்ணுக்கு வளைகாப்பு செய்வது என்பதாக. சட்ட சமுதாயத்தில் சில ஆயிரம் ஆண்டுகளாக- தமிழர் கோயில்கள் தமிழர் அல்லாதவர் கைகளில், தமிழர் ஆட்சி தமிழர் அல்லாதவர் கைகளில், சிந்து சமவெளி நாகரிகம் கண்ட தமிழர் தொன்மையை நிறுவும் அதிகாரம் தமிழர் அல்லாதவர் கைகளில், வரி வாங்கும் உரிமை தமிழர் அல்லாதவர் கைகளில், கல்வி உரிமை தமிழர் அல்லாதவர் கைகளில், இறுதியில் தமிழர்வேளாண்மையும் நடுவண் பாஜக அரசு கையில் என்கிற நிலையில்- எடப்பாடி அரசு மீது ஆயிரம் முரண்பாடுகள் தமிழர்களுக்கு இருந்தாலும் கூட, தமிழக வேளாண்மையின் மீது வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டக்காப்பை முன்னெடுத்திருக்கிற முதல்வர் எடப்பாடி பாராட்டுக்கு உரியவரே. ஆனால் இதில் நடுவண் பாஜக அரசிடம் தோற்றுப் போகாமல் வெற்றியைத் தொடர்ந்தே ஆகவேண்டியது கட்டாயம். காவிரி கழிமுக மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட முன்வரைவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பதிகை செய்தார் என்பது நமது பீடிகைக்கான செய்தியாகும். அந்த சட்டமுன்வரைவில், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் புதிதாகக் கொண்டுவரும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் காவிரி கழிமுகப் பகுதியில் செயல்படுத்த முடியாது. அதேபோல் துத்தநாக உருக்காலை, தோல் பதனிடும் ஆலைகளையும் புதிதாகத் தொடங்க அனுமதியில்லை. சட்டம் கொண்டுவரப்பட்ட நாளுக்கு முன்னதாக அங்குச் செயல்படும் திட்டங்களுக்கு எந்த பதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் காவிரி கழிமுக மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடுவண் பாஜக அரசு மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருவதான நிலையில், அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி கழிமுக மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்க, தமிழக உழவர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



