கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக சீனா அறிவித்துள்ளது. 11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா உலகையே உலுக்கி வருகிறது. இந்தியா போல சில நாடுகள் கொரோனா பரவலுக்கு பொது ஊரடங்கைத் தீர்வாக முன்னெடுத்து, நாட்டின் பொருளாதாரத்திலும் ஆடிப்போய் இருக்கின்றன. சீனா தேவையையொட்டி முடக்கத்தை முன்னெடுத்து கொரோனாவிலிருந்து முதலாவதாக மீண்டு வந்திருக்கிறது. கொரோனா நுண்ணுயிரிக்கு இன்றளவும் தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. உலக ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 6 மாதங்களாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், அதிகாரப்பாடாக உறுதியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், சீனா, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதல்கட்ட சோதனை நடத்தியதாகவும் அது வெற்றிகரமாக நிறைவேறியதாகவும் அறிவித்துள்ளது. இது குறித்து பிரிட்டனை சேர்ந்த மருத்துவ ஆய்விதழான தி லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி முதல்கட்ட சோதனையில் சீனா வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துள்ளதாகவும், இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை யார் வேண்டுமானாலும் பரிசோதித்து அறியலாம் எனவும் சீனா தெரிவித்துள்ளது. சீனா கண்டறிந்துள்ள தடுப்பு மருந்து மிக பாதுகாப்பானது மற்றும் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்கிறது. இந்த ஆய்வுக்காக 108 தன்னார்வலர்களை தேர்வு செய்த சீனா, அவர்களை 3 குழுவாக பிரித்து, வெவ்வேறு அளவுகளில் மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு 28 நாட்கள் வரை கண்காணிக்கப்பட்டனர். அவர்களது உடலில் எந்தவித தீவிரமான மாற்றங்களும் கண்டறியப்படவில்லை. தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக்கொண்டுள்ளதே இதன் பொருளாகும். இது சார்ஸ் வைரசுக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. இந்தத் தடுப்பு மருந்துக்கு Ad5-nCoV என பெயரிடப்பட்டுள்ளது. முதல்கட்ட சோதனையின் வெற்றி, அடுத்தக்கட்ட சோதனைகளை தொடர வழி செய்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. முதல்கட்ட சோதனை சில மனிதர்களுக்கு வெற்றியடைந்ததால், அடுத்தக்கட்ட சோதனைக்கு 508 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்க சீனா முடிவுசெய்துள்ளது. மேலும், ShaCoVacc மற்றும் PiCoVacc ஆகிய 2 தடுப்பு மருந்துகளையும் மனிதர்களிடம் பரிசோனை செய்ய சீனா அனுமதி அளித்துள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சோதனையில் சீனாவின் முதல்கட்ட வெற்றி, ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



