துப்பரவுப் பணியாளர், தூய்மை பணியாளர் என்று அழைக்கப் படுவது முன்னேற்றமே. ஆனால் ஒரேயொரு படியேற்றம்தான். இன்னும் தொன்னூற்று ஒன்பது படிகள் அவர்களை முன்னேற்ற வேண்டும். 12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை, தூய்மைப் பணியாளர்கள் என அழைப்பது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் அண்மையில் வெளியிட்ட உத்தரவு:- இதையடுத்து, நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றில் 44,646 துப்புரவுப் பணியாளர்கள் இருப்பதாகவும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் 26,404 துப்புரவுப் பணியாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்தப் பணியாளர்களும், புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது, தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மக்களின் நலனையும், பொது நலங்கைப் பேணுவதிலும், இவர்களின் பணியானது முதன்மைப் பங்கு வகுக்கிறது. எனவே, இப்பணியாளர்களின் செயல்பாடுகளைக் கௌரவிக்கும் விதமாகவும், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையிலும், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும், அனைத்துத் துப்புரவுப் பணியாளர்களையும், ‘தூய்மைப் பணியாளர்கள்’ என அழைக்கப்படுவதற்கு உரிய ஆணை வெளியிடுமாறு, அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை, அரசு கவனமுடன் ஆய்வு செய்ததன் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களைக் கௌரவப்படுத்தும் விதமாகவும், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், அனைத்து துப்புரவுப் பணியாளர்களும், இனி ‘தூய்மைப் பணியாளர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள் என அரசு ஆணையிடுகிறது. மேலும், இதுகுறித்து, நகராட்சிப் பணி விதிகள், பேரூராட்சி பணி விதிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிப் பணி விதிகளில் உரிய திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக, கருத்துருவினை, உரிய விரைவு திருத்த அறிவிக்கையுடன் அரசுக்கு அனுப்புமாறு, முறையே நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சிகளின் இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுவதாக தனது உத்தரவில் ஹர்மந்தர் சிங் தெரிவித்துள்ளார். குறள்:263 தவம் என்கிற அதிகாரத்தில் வருகிற இந்தக் குறள் மூலமே நமக்கு துப்பரவு என்பதற்கான விளக்கம் கிடைக்கிறது. துப்பரவு என்பது தூய்மை என்ற பொருளில் இல்லை. இல்லறத்தில் இருந்து கொண்டு உணவு, உடை, இருப்பிடம், கருவிகள் படைக்கிற துறையைக் குறிப்பிடுவது ஆகும். துப்புரவுப் பணியாளர்கள் என்று கூறிவிட்டு அவர்களுக்குத் தூய்மை பணியை மட்டுமே வழங்கி வந்தது, இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் காங்கிரசார் ஆட்சி. தூய்மைப் பணி செய்கிறவர்களைத் துப்பரவு பணியாளர் என்று குறித்தது- பாகுபாடு கருதாத தமிழர் வாழ்வியலை ஏதோ ஒரு வகையில், பாகுபாடு கருதியதான இனமே என்று அடையாளம் காட்டுவதற்கே அந்தத் தலைப்பு முன்னெடுக்கப்பட்டது என்பதில் ஐயம் ஏதும் இல்லை. அந்த வகையில் தூய்மைப் பணி செய்கிறவர்களைத் தூய்மைப் பணியாளர்கள் என்றே அழைப்பது சரியே. ஆனால் அது மட்டுமே போதாது. அந்தத் துறையில் விரும்பும் அனைவரும் ஈடுபட, சாதிய ஏற்றதாழ்வு இல்லாமல், அதுவும் ஒரு தொழில் என்ற வகையாக முன்னெடுக்கவும் வேண்டும். இந்தத் தூய்மைப் பணிகளில் முழுக்க முழுக்க கருவிகளே கையாளப்பட வேண்டும். இயல்அறிவுத்துறை (சயின்ஸ்) வளர்ந்திருக்கும் நிலையில் தூய்மைத் துறைக்கு முற்றிலும் இயந்திர மனிதர்களையே பயன்படுத்தலாம். தூய்மை பேணுதல் சார்ந்த மருத்துவத் துறைக்கு நீட் வைத்து மேல்தட்டு மக்களை நுழைப்பதற்குப் பதிலாக, தூய்மைப் பணித்துறையை பாடப்பிரிவாக எடுத்து பதினொன்றாம் பனிரெண்டாம் வகுப்புகளில் தூய்மைப் பணித்துறையில் நடைமுறை (பிராக்டிகல்) பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஒதுக்கலாம். மருத்துவத்துறையில் ஐம்பது விழுக்காட்டினர், ஆதாயம் (கிரடிட்) இல்லாமல் தூய்மைப் பணியாளர்களே ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். மருத்துவர் செய்யும் அறுவை சிகிச்சைக்கு முன்னர் உடல் முடிகளை அகற்றுவதும், எனிமா கொடுத்து குடல் கழிவுகளை அகற்றுவதும் இந்த தூய்மைப் பணியாளர்கள் தாம். உயிரோடு இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது மருத்துவர்கள்தாம். ஆனால் இறந்த உடலை உடற்கூறு ஆய்வுக்கு, அறுவை சிகிச்சை செய்வது இந்த தூய்மைப் பணியாளர்கள்தாம். விபத்தில் மரணம் அடைந்தவர்கள் உடலை சவக்கிடங்கில் பாதுகாத்து வைத்திருந்து உறவினர்களுக்கு ஒப்படைக்கும் பணியைச் செய்பவர்கள் இந்தத் தூய்மைப் பணியாளர்கள் தாம். இவை மட்டுமல்ல. இன்னும் நிறைய நிறைய. இவர்கள் இல்லாவிட்டால் யாரும் மருத்துவ மனைக்குள் நுழையவே முடியாது. ஏன் மருத்துவர்களே கூட. நோய் வந்தால் மருத்துவம் அளிப்பது மருத்துவத் துறை. நோயே வராமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள்தாம் இந்த தூய்மைப் பணியாளர்கள். இவர்கள்தாம் மருத்துவத்துறையின் வேர். துப்பரவுப் பணியாளர் தூய்மை பணியாளர் என்று அழைக்கப் படுவது முன்னேற்றமே. ஆனால் ஒரேயொரு படியேற்றம்தான். இன்னும் தொன்னூற்று ஒன்பது படிகள் அவர்களை முன்னேற்ற வேண்டும்.
நாளது 06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (19.03.2020) அன்று சட்டப்பேரவையில், விதி எண். 110-இன் கீழ், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் தூப்புரவுப் பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையிலும், அவர்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகவும், அனைத்துத் துப்புரவுப் பணியாளர்களும், இனி ‘தூய்மைப் பணியாளர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள் என முதல்வர் அறிவித்தார்.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
குறள் விளக்கம்:
துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?
இன்றைக்கு ஊடகத்துறையில், கல்வித்துறையில், கலைத்துறையில், அரசியல் துறையில் இருப்பவர்கள் ஆகிய உளஉழைப்பை சார்ந்தவர்கள்தாம், அன்றைய துறந்தவர்கள், புலவர்கள், சான்றோர்கள் என்பவர்கள் எல்லாம். மற்ற மற்ற வேளாண்மை, தொழில், வணிகம் சார்ந்து இயங்குகிறவர்கள்தாம் திருவள்ளுவர் காலத்தில் துப்புரவுத் துறையினர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



