தொலைத் தொடர்புத் துறையில் ஜியோ களமிறங்கிய பிறகு ஏர்டெல்லைத் தவிர்த்து, பல நிறுவனங்களை ஓட ஓட விரட்டியடித்தது ஜியே. தற்போது மின்வணிகத்தில் கால் பதித்திருக்கிறது ஜியோ. தொலைத் தொடர்புத் துறையில் அடாவடித்தது போல இங்கும் அடாவடிக்குமா? 11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இதோ வந்து விட்டதல்லவா முகேஷ் அம்பானியின் ஜியோ மார்ட். இனி அமேசான், பிளிப்கார்டு உள்ளிட்ட மின்;வணிக நிறுவனங்களுக்கு பின்னடைவு தான். தான் எந்த தொழில் எடுத்தாலும், அதில் அதிரடியான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் கொடுத்து மக்களை தன் வசம் ஈர்க்கும் வல்லமை படைத்தவர் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. மேலும் ஆளும் நடுவண் பாஜக அரசுக்கு மிகவும் இணக்கமான நபரும் கூட. இந்த நிலையில், நீண்டகாலமாக வரும்- வரும் என்று சொல்லப்பட்டு வந்து கொண்டிருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மார்ட், இயங்கலை சில்லறை விற்பனை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் மின்வணிகத் தளமான ஜியோ மார்ட் பல மாத சோதனைகளுக்கு பிறகு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மார்ட் நிறுவனம், அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில் தற்போது சில இடங்களில் மட்டுமிருந்து கேட்புகளைப் பெற தொடங்கியுள்ளது. இதில் பல பொருள்களும் அச்சிட்ட விலையிலிருந்து ஐந்து விழுக்காட்டிற்கும் கீழ் விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த இணையத்தில் மளிகைப் பொருட்கள் மற்றும் பண்னை பொருட்களையும் விற்பனை செய்வதாகவும், பண்னை பொருட்கள் நேரடியாக ஒத்துழைப்பு தரும் உழவர்களிடம் இருந்து பெறப்படும் என்றம் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. நமது பகுதியில் சேவை இருக்கிறதா? சரி எப்படி நாம் இந்த தளத்தில் சென்று பொருட்களை வாங்குவது என்பதற்கு https://www.jiomart.com என்ற இணைய முகவரியை நமக்கு தெரிவித்துள்ளது. இந்த இணையதளத்தில் கேட்புக்கான பதிவினை செய்யும் போது, ஆறு இலக்க அஞ்சல் குறியீட்டினைக் கேட்கிறது. அதன் பின் உங்களது பகுதிகளில் சேவை இருக்கிறதா? இல்லையா? என்று தெரிவிக்கிறது. அண்மையின் தான் சமூக வலைதள பெருநிறுவனமான முகநூல் நிறுவனம், ரிலையன்ஸின் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய சிறுபான்மை பங்குதாரராகவும் முகநூல் மாறியுள்ளது. அதோடு முகநூலின் புலன நிறுவனமும் ஜியோ மார்ட்டுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜியோ மார்ட் புலனம் (வாட்ஸ் அப்) மூலம் கேட்புகளை வழங்கும் அம்சத்தினை வழங்குகிறது. இருப்பினும் இது நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் உள்ளிட்ட இடங்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டது. எனினும் விரைவில் நாட்டின் பிற பகுதிகளுக்கும் படிப்படிப்பயாக பிற சேவைகளை தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ மார்டில் ஒரு கேட்பைப் பெற பயனர்கள் வாட்ஸ் அப் வணிக எண் ஆன 88500 08000 என்ற எண்ணினை சேமிக்க வேண்டும். அதற்கு ஒரு ஹாய் அனுப்புவதன் மூலம் பயனர் அஞ்சல் குறியிட்டிற்குள் நுழைய வழி நடத்தப்படுவார்கள் என்று ஜியோமார்ட் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே சேவையினை தொடங்கியுள்ள நிலையில், விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக பின்னடைவை சந்தித்துள்ள அமேசான், பிளிப்கார்டு நிறுவனங்களுக்கு, நிச்சயம் ஜியோ மார்ட் நிறுவனம் போட்டியாக அமையும் என்றும் கூறப்படுகிறது. தொலைத் தொடர்புத் துறையில், ஏர்டெல் புலியிடம் மட்டும் போராடிக் கொண்டு, ஜியோ எப்படி தனிக்காட்டு சிங்கமாக வலம் வருகிறதோ, அதே போல இதிலும் தனது பலத்தினை முழுமையாக காட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



