ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் புயலுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது. 09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாட்டில் தானே, வர்தா, கஜா, நிசா, ஒக்கி, பனி புயல், வாயு புயல் என பல புயல்கள் ஆடிய கோரத்தாண்டவத்தை பார்த்திருக்கிறோம். இப்போது வைக்கப்பட்டுள்ள நிவர் புயலுக்கு வெளிச்சம் என்று பொருள். பெரும்பாலான புயல்கள் ஒரு கிழமையோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது. புயலுக்கு பெயர் சூட்டும் நாடுகள் ஒவ்வொரு கடல் பகுதி அடிப்படையாக புயலின் பெயர் ஏற்கனவே முடிவு செய்யப்படும். அதாவது பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல் என வெவ்வேறு கடல் பகுதிக்கு தனித்தனி பெயர் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 7 தட்பவெப்ப மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய பெருங்கடல் வடக்கு மண்டலத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இதனுடன் வங்கதேசம், ஈரான், மாலைத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த 13 நாடுகளும் தலா 13 பெயர்களை தேர்வு செய்து வைத்துள்ளது. இதில் ஒவ்வொரு பெயராக தேர்வு செய்து புயலுக்கு பெயர்கள் வைக்கப்படுகின்றன. புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார். இந்த அளவுகோலின்படி சுழியம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று, மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று வீசும். 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை. வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த பெயர்கள் மூலம் தனிபுயல்களை எளிதில் அடையாளம் காணமுடியும். அதன் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். தயார் நிலையில் இருக்க முடியும். மேலும் குழப்பங்களை தவிர்க்கவும் இது வழிவகுக்கும். ஒரு புயலுக்கு பெயர் வைக்கும் போது சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே வெப்ப மண்டல சூறாவளிகளுக்கான குழு அந்த பெயரை இறுதிப்படுத்தும். புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த போது புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 67 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்கத் தொடங்கிய பிறகு, 42 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இந்தியப் பெருங்கடலில் வடக்கு மண்டலத்தில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. டெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. இந்திய வைத்த புயலின் பெயர்கள் இந்தியா 13 புயல்களுக்கான பெயரை வழங்கியுள்ளது. அவற்றில் கட்டி, தேஜ், முரசு, ஆக், வியாம், ஜோர், புரோபஹோ, நீர், பிரபஞ்சன், கர்னி, ஆம்புத், ஜலதி மற்றும் வேகா ஆகியவை ஆகும். இந்த பெயர்களில் சில பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளவையாகும். தற்போது தமிழகத்தை தாக்கப் போகும் புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு ஈரான். இரானிய மொழியில் நிவர் என்றால் வெளிச்சம் என்று பொருள். இந்திய பெருங்கடலில் வடக்கு மண்டலத்தில் உருவாகும் புயலுக்காக உருவாக்கப்பட்ட புது பெயர் பட்டியலில் மூன்றாவது பெயராக இது இருக்கிறது. இந்த ஆண்;டு மேற்கு வங்கத்தையும், வங்கதேசத்தை பெரிதும் சேதமாக்கிய அம்பான் புயலுக்கு பெயர் வைத்த நாடு தாய்லாந்து. ஐந்து மாதங்களுக்கு முன்பு மஹாராஷ்ட்ராவில் கரையை கடந்த நிசாக்ரா புயலின் பெயரை வங்கதேசம் பரிந்துரை செய்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரபிய கடலில் உருவாகி சோமாலியாவில் கரையை கடந்த கதி புயலுக்கு இந்தியாவின் பரிந்துரை செய்த பெயர் வைக்கப்பட்டது. அடுத்து அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயலுக்கு மாலைத்தீவு பரிந்துரை செய்த புரேவி என்னும் பெயர் சூட்டப்படும். இதுபோல அடுத்த 25 ஆண்டுகளில் வரப்போகும் புயலுக்கான பெயர் பட்டியல் உலக வானிலை ஆராய்ச்சி மையத்திடம் தயாராக உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



