கடந்த ஆறு மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல் இன்னும் 12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: வங்காள விரிகுடா கடலில் உருவான நிவர் புயல் கடந்த 6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிவர் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் தீவிர புயலாக வலுவடைந்து இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள கீச்சுப் பதிவில் கூறியுள்ளதாவது: கடலூருக்கு கிழக்கு- தென்கிழக்கில் 300 கி.மீ. தொலைவில் இது நகர்ந்து வருகிறது. புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்;கில் 310 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் 370 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது நிவர் புயல். அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் தீவிர புயலாக நிவர் புயல் வலுவடையும். இன்று இரவு கரையை கடக்கும் அடுத்த 6 மணி நேரத்துக்கு மேற்கு- தென்மேற்கு திசையிலும் பின்னர் வடமேற்கு திசையை நோக்கியும் நிவர் புயல் நகரும். பின்னர் இன்று இரவு தமிழகம்- புதுவை கடலோரத்தில் அதாவது காரைக்கால்- மாமல்லபுரம் இடையே நிவர் புயல் கரையை கடக்கும். நிவர் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120, 130 கி.மீ முதல் 145 கி.மீ. வரையில் புயல் காற்று வீசக் கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



