இந்தியாவில் வடநாட்டவர்கள், நேபாளத்தை அடுத்து இராமயணத்திற்கு உரிமை கொண்டாடும் மூன்றாவது நாடாக, விமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் இராவணன் என்ற மிகப் பெரிய ஆய்வில் களம் இறங்கியிருக்கிறது இலங்கை. 03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நேபாளத் தலைமைஅமைச்சர் கே.பி.சர்மா ஒலி, உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை, நேபாளத்தில்தான் உள்ளது. இராமர் தெற்கு நேபாளில் உள்ள தோரியில்தான் பிறந்தார் என்று கடந்த கிழமை ஒரு விவாதத்தைக் கிளப்பியிருந்தார். மேலும் அவர் கூறுகையில்- இன்னமும் சீதையை நாங்கள்தான் இந்திய இளவரசர் இராமருக்குக் கொடுத்தோம் என்று நம்புகிறோம். ஆனால், நாங்கள் அயோத்தியில் இருந்த இளவரசருக்குத்தான் சீதையைக் கொடுத்தோம். இந்தியாவில் இருந்தவருக்கு அல்ல. இராமன் ஆரியர் இல்லை நேபாளி என்று நேபாள தலைமைஅமைச்சர் தெரிவித்திருந்தார். ஆரியர்கள் தங்களுடைய தொல்கதை என்று கூறிக் கொள்கிற பாஞ்சாலி- பாண்டவர் தொல்கதை மீது யாரும் எந்த உரிமையும் கோருவது இல்லை. ஆனால் இராமயணத்தை இந்தியா முழுக்க தங்களுடைய தொல்கதை என்று உரிமை கொண்டாட பல்வேறுபட்ட மக்கள் குழுக்கள் இன்றும் உள்ளன. ஆனால் அதிகாரப்பாடாகவும், ஒரு ஆய்வாகவும் இராமயணத்திற்கு உரிமை கொண்டாடியது நேபாளம்தான். அவர்களுக்கு இராமயணத்தின் மீது உரிமை இருக்கிறது என்பதை:- இராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினரான மஹந்த் திதேந்திர தாஸ் கூறுகையில், இராமர் இங்கிருக்கும் சராயு ஆற்றுக்கு அருகே பிறந்தவர். அயோத்தியை சேர்ந்தவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. சீதை நேபாளத்தைச் சேர்ந்தவர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், இராமரை நேபாளி என்று கூறுவது தவறு. இராமரை நேபாளி என்று கூறிய ஒலிக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஆக சீதை நேபாளி என்று ஒப்புக்கொள்வதன் மூலம், இராமன் நேபாளி இல்லாமேலே இருந்தாலும் இராமயணத்தின் மீதான தங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்கான போலியான சீண்டலே இராமன் நேபாளி என்று நேபளத் தலைமை அமைச்சர் வாதிட்டது என்ற கருத்து பொதுவெளியில் பேசப்படுகிறது. ஆக நேபாளம் கடந்த கிழமை இப்படி இராமயணத் தொல்கதையை இருநாட்டிற்கான தொல்கதையாக நிறுவதற்கு ஒரு விதையை ஊன்றியிருக்கிறது. இந்த நிலையில் இந்தக் கிழமை, விமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் இராவணன் என்ற மிகப் பெரிய ஆய்வில் களம் இறங்கியிருக்கிறது இலங்கை. உலகத்திலேயே விமானத்தை பயன்படுத்தியது தங்களது மாமன்னர் இராவணன் என்று கூறி வரும் இலங்கை, தற்போது இராவணன் குறித்து மிகப் பெரிய ஆய்வு ஒன்றில் இறங்கியுள்ளது. இராவணனை முன்வைத்து இலங்கை தற்போது இராமாயணத் தொல்கதைக்கு மூன்றாவது நாடாக உரிமை கோருவதாகத் தெரிகிறது. நேபாளத்தைப் போல பகிரங்கமாக இல்லாமல் தொல்லியல் துறை, இராவணன் பெருமை பேசுகிறோம் என்கிற தொனியில் தற்போது களமிறங்கியுள்ளது இலங்கை. இது தொடர்பாக இலங்கையில் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலா, விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இராவணன் இந்தியாவுக்கு விமானம் இயக்கிய வான்வழித் தடம் குறித்த ஆய்வை மேற்கொள்வதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் தொல்கதையான இராமாயணத்தில் சொல்லப்படும் இராவணன், விமானத்தை பயன்படுத்தினார் என்பது உண்மை. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விமானங்களை இயக்கிய பேரரசன் என்றெல்லாம் புகழாரம் சூட்டினர். இப்போது கூட இராவணன் பெயரில் இலங்கை செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



