24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில்: இலங்கை போரில் இருதரப்பிலும் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா இணைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடைபெற உள்ள 40வது ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது. தமிழர்களால் தான் அதிபரான புதிதில், இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் இலங்கை அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவின் தீய சகவாசத்திற்குப் பிறகு தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டு, 'இலங்கையில் யாருடைய தலையீடும் இல்லாமல் எங்கள் சொந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள எங்களுக்கு சில காலம் தேவை என்றும், ஐ.நா. கூட்டத்துக்கு எனது சார்பில் ஒரு குழுவை அனுப்புவேன்' என்று தெரிவித்தார். ஆனால் இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே மறுநாளே இதற்கு மாறான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைஅமைச்சர் அலுவலகமும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 'இலங்கை தனது வாக்குறுதியை தொடர்ந்து செயல்படுத்தும். ஐ.நா. தீர்மானப்படி ஒரு நீண்டகால மற்றும் நிலையான சமரச தீர்வை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்ளும்.' என்றும் கூறப்பட்டுள்ளது. இது அதிபர் சிறிசேனா தெரிவித்த கருத்துக்கு நேர்மாறாக உள்ளது. சிறிசேனாவுக்கும், தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ஏற்கனவே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்ரமசிங்கேவை தலைமைஅமைச்சர் பதவியில் இருந்து சிறிசேனா நீக்கினார். இந்த பிரச்சினையில் உச்சஅறங்கூற்றுமன்றம் தலையிட்டதால் விக்ரமசிங்கே மீண்டும் தலைமைஅமைச்சராகப் பொறுப்பு ஏற்றது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இராஜபக்சேவின் கெட்ட சகவாசத்தில் ஏற்பட்ட அழுக்கிலிருந்து விடுபடும் முயற்சி அதிபர் சிறிசேனாவிற்கு இல்லவேயில்லை. தமிழர் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப் படவேண்டும் என்பதான சிறிசேனாவின் கனவு கலைந்தபாடில்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,085.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.