24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போகிற போக்கை பார்த்தால் மூன்றாவது அணி கூட்டணி ஒன்று தினகரன் தலைமையில் உருவாகி விடும் போல் இருக்கிறது. இப்போதுவரை தேமுதிக கேட்ட தொகுதிகளை தராமல் அதிமுக போக்கு காட்டி வருகிறது. யதார்த்தத்தை புரிந்து கொண்டு கிடைப்பதை வாங்கிகொள்வோம் என்ற தன்மை தேமுதிகவுக்கு இன்னமும் வராமல் இருக்கிறது. இதனால்தான் இழுபறியாக உள்ளது. இதில், ஏடாகூடமாக பேசி இருக்கும் மரியாதையை அக்கட்சி கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதனால் ஏற்கனவே தர இருந்த 4 இடங்களில் 3, 2 என்று அதிமுக குறைத்து கொண்டே போகிறதாம். 4 தருவதையே வேண்டாம் என்றவர்கள் 3, அல்லது 2 தந்தால் வாங்கவா போகிறார்கள்? அதனால் எப்படியும் தினகரனுடன் கூட்டணி வைக்க கூடும் என்ற தகவல் வருகிறது. ஒருவேளை விஜயகாந்த் தினகரனுடன் கூட்டணி அமைத்தால், சரத்குமாரையும் கூடவே அழைத்து கொண்டு போகும் அளவுக்கு நெருக்கமும் நட்பும் உள்ளது. ஏற்கனவே தினகரனிடம் மனிதநேய மக்கள் கட்சி சேருவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இதை எப்படியோ நாளை ஜவாஹிருல்லா அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இது போக இன்னொரு தகவலும் கசிகிறது. அது வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி தினகரனுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்பதுதான். இதற்கான அறிவிப்பும் நாளை வெளியாகும் என சொல்லப்படுகிறது. பாமகவின் 7 தொகுதிகளிலும் வாக்குகளை பிரிக்க வேல்முருகனின் பங்கு முதன்மையாக இருக்கும் என்று தினகரன் நினைப்பதாக தெரிகிறது. அதனால்தான் அவரை தன் கூட்டணிக்கு இழுத்துள்ளதாம்! ஆக மொத்தம், தினகரன், விஜயகாந்த், சரத்குமார், வேல்முருகன் தலைமையில் இன்னொரு மக்கள் நலக்கூட்டணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மேலும் கூட்டணிக்காக யாரிடமும் இதுவரை தினகரன் இறங்கி செல்லவில்லை. கூட்டணிக்காக கொள்கை தர்மங்களை விட்டுத்தரவும் இல்லை. தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டு, ஒரு தலைமை தகுதியில் இருந்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார். ரொம்ப நிதானம் காட்டுகிறார். அனுபவத்தை அழகாக பயன்படுத்துகிறார், திட்டமிட்டு காய் நகர்த்துகிறார். அதனால் சத்தமே இல்லாமல் தினகரனின் 3-வது அணி உருவாகுமா? ஆனாலும் விஜயகாந்த், சரத்குமாருடன் தன்னை இத்தனை காலமாக நம்பி கூடவே இருக்கும் 18 தகுதி நீக்க சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்தே தினகரன் அரவணைத்து செல்வார் என்பதில் சந்தேகமில்லை! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,085.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.