25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேர்மையும், மிடுக்குமான ராயபுரம் காவல் துறை துணைஆய்வாளர் கதிரேசன் எனும் கதைத்தலைவர் கதிர். அவரது காதலி சிருஷ்டி டாங்கே. கதிரின் அப்பா பொன்வண்ணன். பட்டாளம் அண்ணன் பவன், அண்ணி நீலிமாராணி என எல்லோரும் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். ராயபுரம் ஏரியாவில் நேர்மையான காவல் துறை துணைஆய்வாளராக இருக்கும் கதிர் ஒரு குழந்தை கடத்தல் வழக்கில் களமிறங்குகிறார். அதில் சம்பந்தப்பட்ட லகுபரன் இவரால் 5 கோடி சம்பாதிக்க வேண்டிய அந்தக் கடத்தலில் தோல்வியை தழுவுகிறார். அது முதல் கதிரையும் அவரது குடும்பத்தையும் உண்டு இல்லை என பண்ண நினைக்கும் லகுபரன், கதிரின் உறக்கத்தை போக்கி அவர் குடும்பத்திற்கும் அவருக்கும் தொல்லை மேல் தொல்லை தருகிறார். லகுபரனின் தீமை கூட்டத்தை கூண்டோடு பிடிக்க நினைக்கும் கதிர் தன் காவல் துறை ஆற்றலைக் காட்டி எப்படி? லகுபரனையும் அவனது கூட்டத்தையும் தீர்த்து கட்டுகிறார்? என்பதுதான் சத்ரு படத்தின் விறுவிறுப்பான கதையும் களமும். ஆர் டி இன்பினிட்டி ஒப்பந்தம் என்டர்டைன்மென்ட் பேனரில் ரகுகுமார் என்கிற ராஜரத்தினம் மற்றும் சிறிதரன் இணைந்து தயாரித்திருக்கும் சத்ரு படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் நவீன் நஞ்சுண்டன். மைல்ஸ்டோன் மூவிஸ் ஜி.டில்லிபாபு உலகம் முழுவதும் வெளியிட்டிருக்கிறார். பிரசன்னா ஜிகேயின் படத்தொகுப்பில் சூரிய பிரசாத் பின்னணி இசையில் மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவில், அம்ரிஷ் இசையில்,கதிர், சிருஷ்டி டாங்கே, லகுபரன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து ரிஷி, பவன், சுஜாவாருணி, அர்ஜுன் ராம், ரகுநாத், கியான், சத்து, குருமூர்த்தி, பாலா ஆகியோர் நடிக்க வந்துள்ள சத்ரு ரசிகனை படுத்தாத அளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இளம் காவல் துறை துணைஆய்வாளர் கதிரேசனாக கதைத்தலைவர் கதிர், மிடுக்கும் துடுக்குமென தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார். கதைத்தலைவி சிருஷ்டி டாங்கேவுக்கு படத்தில் பெரிய வேடம் ஒன்றும் இல்லை என்றாலும் கிடைத்த இடைவெளியில் கிடா வெட்டும் முகமாக தன் இருப்பை நிலைநாட்டியிருக்கிறார். ராட்டினம் படத்தில் கதைத்தலைவனாக நடித்த இளம் நடிகர் லகுபரன் தான் இப்படத்தில் முதன்மைப் பகைவன். குழந்தை கடத்தும் கொடூரனாக பயமுறுத்தியிருக்கிறார் நாயகரின் அப்பாவாக பொன்வண்ணன், அண்ணியாக நீலிமா ராணி, அண்ணனாக அதுவும் பட்டாளம் ரிட்டன் அண்ணனாக பவன் காவல் துறை ஏசி மாரிமுத்து, வில்லி சுஜாவாருணி, ரிஷி, அர்ஜுன் ராம், ரகுநாத், கியான், சத்து, குருமூர்த்தி, பாலா... உள்ளிட்ட அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பிரசன்னாவின் படத்தொகுப்பும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் இப்படத்திற்கு பெரும்பலம். அதே மாதிரி, சூரிய பிரசாத்தின் பின்னணி இசையும் அம்ரிஷ்வுடைய பாடல்கள் இசையும் படத்திற்கு கூடுதல் பலம். காவல்துறையைக் குழந்தை கடத்தல் கும்பலால் இந்த அளவிற்கு ஓட வைக்க முடியும் எனும் முடிச்சு படத்தின் பலவீனம். சன் தொலைக்காட்சி தொடர் பார்ப்பது மாதிரியிருக்கிறது. நவீன் நஞ்சுண்டன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் இவற்றுள் திரைக்கதையும் இயக்கமும் இப்படத்திற்கு பெரும்பலம். மற்றபடி, ஒருகுப்பைத் தொட்டியில வந்து விழும் பணத்தை பார்த்துட்டு அதுல திங்க எதுவும் இல்ல. அதுல வெறும் பணம் தான் இருக்கு எனும் மனநிலை பாதித்த பிச்சைக்காரன் மூலமாக கவிதை சொல்லியிருப்பதாக இயக்குனர் நவீன் நஞ்சுண்டனுக்கு நினைப்பு. அது என்ன சத்ரு? பகைவன், எதிரி இப்படி ஏதாவது வைங்கப்பா. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,086.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.