இந்திய எல்லையில் சுற்றித் திரிந்த சிங்கள மீனவர்களை கைது செய்து தமிழகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர் இந்திய இராணுவத்தினர். 04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று காலை உச்சிப்புளி ஐஎன்எஸ் விமானப்படை முகாமிலிருந்து கடற்படை வீரர்களை தாங்கிய உலங்கு வானூர்தி ஒன்று மன்னார்வளைகுடா பகுதியில் காவல் சென்ற பொழுது, தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த மூன்று நபர்கள் நெகிழிப் படகில் இந்திய பகுதிக்குள் வருவதை அறிந்து அவர்களை தடுத்தும் நிறுத்தும் நோக்கில் முதலில் அறிவிப்பு செய்துள்ளனர். படகும் நிற்காமல் செல்ல, விடாமல் அதனை விரட்டி தனுஷ்கோடி அருகில் அரிச்சல்முனை கடல் பகுதியில் வைத்து பிடித்து தமிழக கடலோர காவல் குழும காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சிங்களவர்கள் தமிழகம் நோக்கி தங்கம் கடத்தி வருகிறார்கள் என்றால், இது தற்செயலான நிகழ்வாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லையே. ஆனால் அவர்கள் தற்செயலாகத்தான் சிக்கியிருக்கிறார்கள். முயன்றால் பெரிய கும்பலே சிக்கும் போல இருக்கிறதே என்றே தோன்றுகிறது நமக்கு செய்தியைக் கேட்டவுடன்.
விசாரணையில், ‘தாங்கள் மன்னார் பகுதியில் இருந்து மீன் பிடிப்பதற்காக அதிகாலை 4 மணிக்கு வந்ததாகவும், காற்று காரணமாக இந்திய கடல் பகுதிக்கு தவறுதலாக வந்துவிட்டதாகவும்’ தெரிவித்தனர். எனினும், காவல்துறையினரின் தொடர் விசாரணையில், ‘தங்கச்சிமடம் பகுதியில் உள்ள சிலரிடம் கொடுப்பதற்காக தங்கம் கடத்தி கொண்டு வந்ததாகவும், அது படகின் பின்பகுதியில் ஒளித்து வைத்திருப்பதாகவும் கூறி இடத்தினையும் காண்பித்தனர். படகின் பின்புறத்தில் உடைத்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிராம் அளவு கொண்ட 35 தங்க கட்டிகள் இருப்பதையறிந்து அதனைக் கைப்பற்றி சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



