இராமர் நேபாளியா ஆரியரா என்ற விவாதத்தில் இரண்டு அணியினராலும் சீதை நேபாளிதான் என்கிற செய்தி ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது ஒரு நல்ல அவல் தான். 31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நேபாளத் தலைமைஅமைச்சர் கே.பி.சர்மா ஒலி, உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை, நேபாளத்தில்தான் உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், இராமர் தெற்கு நேபாளில் உள்ள தோரியில்தான் பிறந்தார் என்றும் தெரிவித்தார். தனது இல்லத்தில் நடந்த கவிஞர் பானுபக்தா பிறந்தநாள் விழாவின்போது இந்தக் கருத்தை நேபாள தலைமைஅமைச்சர் தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்- இன்னமும் சீதையை நாங்கள்தான் இந்திய இளவரசர் இராமருக்குக் கொடுத்தோம் என்று நம்புகிறோம். ஆனால், நாங்கள் அயோத்தியில் இருந்த இளவரசருக்குத்தான் சீதையைக் கொடுத்தோம். இந்தியாவில் இருந்தவருக்கு அல்ல. அயோத்தி என்பது பிர்குஞ்சுக்கு சற்றே மேற்கே உள்ள கிராமமாகும். இப்போதுள்ள இந்தியாவில் உள்ள அயோத்தி அல்ல அது. அந்தக் காலகட்டத்தில் எந்தத் தொடர்பும், போக்குவரத்து வசதியும் இல்லாத சமயத்தில் அவ்வளவு தொலைவில் உள்ள இருவருக்கும் திருமணம் நடப்பது என்பது சாத்தியமில்லை என்றார். தசரத் நேபாளத்தின் அரசர் என்பதால், அவர் மகன் இராமனும் இங்குதான் பிறந்திருப்பார் என்ற வாதத்தையும் முன்வைத்தார். இராமர் நேபாளியா ஆரியரா என்ற விவாதத்தில் இரண்டு அணியினராலும் சீதை நேபாளிதான் என்கிற செய்தி ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது ஒரு நல்ல அவல் செய்திதான். அப்படியானால் விஜயபாகு மனைவி கூவேணிக்கும் இராமன் மனைவி சீதைக்கும் ஒரு வரலாற்று ஒற்றுமை இருப்பது போலத் தெரிகிறதே! மகாபாரதக் கதைத்தலைவிக்கும், இராமயணக் கதைத்தலைவிக்கும் ஒரு நெருடல் இருந்து கொண்டிருப்பதற்கு இதுதான் காரணமா? என்று இனி ஆய்வாளர்கள் கிளம்பி விடுவார்கள்.
இந்த நிலையில் அயோத்தியில் இருக்கும் ஹிந்து மதகுருக்கள் ஒலிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினரான மஹந்த் திதேந்திர தாஸ் கூறுகையில், இராமர் இங்கிருக்கும் சராயு ஆற்றுக்கு அருகே பிறந்தவர். அயோத்தியை சேர்ந்தவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. சீதை நேபாளத்தைச் சேர்ந்தவர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், இராமரை நேபாளி என்று கூறுவது தவறு. இவ்வாறு கூறிய ஒலிக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



