இராமர் மற்றும் அயோத்தி தொடர்பாக நேபாள தலைமைஅமைச்சர் வெளியிட்ட கருத்து அரசியல் கருத்து அல்ல. கலாசார புவியியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளின் முதன்மைத்துவத்தை குறிக்கும் வகையில் தலைமைஅமைச்சர் அவ்வாறு கூறினார் என்று நேபாள அரசு விளக்கம். 31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நேபாள தலைமைஅமைச்;சரின் கருத்துக்கு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இராமர் மற்றும் அயோத்தி தொடர்பாக நேபாள தலைமைஅமைச்சர் வெளியிட்ட கருத்து அரசியல் கருத்து அல்ல. அதை யார் மனதையும், உணர்வையும் புண்படுத்த கூறப்படவில்லை. இராமர் மற்றும் அவரின் பிறப்பிடம் தொடர்பாக பல்வேறு கதைகள் உள்ளன எனவே, இராமர், இராமாயணம் மற்றும் அதனோடு தொடர்புடைய இடங்களின் வரலாறு குறித்து தெரிந்து கொள்ள இராமாயணத்தில் வரும் மிகப்பெரிய கலாசார புவியியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளின் முதன்மைத்துவத்தை குறிக்கும் வகையில் தலைமைஅமைச்சர் அவ்வாறு கூறினார். அயோத்தியின் மதிப்பையோ அல்லது அதன் கலாசார முதன்மைத்துவத்தையோ குறைப்பதற்காகவோ இந்த கூற்றை கூறவில்லை. இராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் விவாஹா பஞ்சமி திருவிழாவின்போது, இந்தியாவின் அயோத்தியிலிருந்து நேபாளத்தின் ஜனக்பூர் வரை திருமண ஊர்வலம் நடைபெறும். மேலும் கடந்த முறை விழாவின் போது ஜனக்பூரிலிருந்து அயோத்திக்கு பேருந்தும் விடப்பட்டது. இது இரு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள கலாசார பந்தத்தை குறிப்பதாக உள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், குலோத்துங்க சோழன் காலத்தில், கம்பர் இராமயணத்தை எழுதினார். 800 ஆண்டுகளுக்கு முந்தையவர் கம்பர். நேபாளத்தில் பனுபக்தா வால்மீகியின் இராமாயணத்தை நேபாள மொழியில் மொழிபெயர்த்தார். மேற்கு நேபாளத்தில் உள்ள தனு பகுதியில் 206 ஆண்டுகளுக்கு முந்தையவர். நேபாளத்தின் காத்மாண்டு சமவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நியோலிதிக் காலப்பகுதியை சேர்ந்த ஆயுதங்களின் மூலம் 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இருந்ததை காட்டுகிறது. திபேத்திய-மியான்மார் இன மக்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வசித்ததாக கருதப்படுகிறது. இந்தோ-ஆரிய மக்கள் (இராமன்) சுமார் கிமு 1500 அளவில் இங்கு வந்தனர், மேலும் சுமார் கிமு 1000 அளவில் பல சிற்றரசுகள் தோன்றின. இவ்வாறான ஒரு சிற்றசான சாக்கியர் இளவரசனான கௌத்தம் சித்தார்த்தன் (கிமு 563-483) என்பவர் தமது அரசை துறந்து மெய்ஞானம் பெற்று பின்னர் புத்தர் என அழைக்கப்பட்டார். கிமு 250 அளவில் இப்பகுதி வட இந்தியாவின் மௌரியப் பேரரசுடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டது, பின்னர் கிபி 4ஆவது நூற்றாண்டளவின் குப்த பேரரசுடைய ஆட்சியின் கீழான அரசாக செயற்பட்டது. கிபி 5வது நூற்றாண்டுக்குப் பின்னர் லிச்சாவி இனமக்கள் காத்மாண்டு சமவெளியை ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சி கிபி 5ஆவது நூற்றாண்டின் பிற்காலம் வரை நீடித்தது. ஆரியர்களின் வரவுக்கு முந்தைய இந்தியா, நாலந்தேயம் என்று அழைக்கப்பட்டது. நாவலந்தேயம் என்பது தெற்கே குமரி முதல் வடக்கே இமயம் வரை இன்றைய பாகிஸ்தான், நேபாளம் அனைத்தையும் உள்ளடக்கியது. ஆரியர் வருகை 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. சீதை நேபாளி என்கிற போது ஆரிய இராமர் சீதை மணமுடித்த கதையால் ஆரியர் நேபாளத்தில் இந்தியாவின் தொல்குடிகளோடு பரவிய வரலாறு நமக்குப் புலப்படுவதாகிறது. சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களுடைதே என்று நிறுவ ஏராளமான ஆதாரங்கள் கிடைத்த போதும், இந்தியாவில் நடுவண் அரசில் ஆரிய வல்லாண்மையே இந்திய விடுதலை தொட்டு தொடர்ந்து வருவதால், ஒட்டுமொத்த சிந்து சமவெளி ஆய்வே கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் இந்தியாவின் தொல்குடிகள் ஆரியர்கள் இல்லையென்று செய்து வந்த கருத்துப்பரப்புதல்கள் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணாமல் போக்கடித்து விட்டன. அதாவது அந்த அடிப்படைகளை விட்டு விட்டு ஆட்சி அதிகாரப் போட்டியில் திராவிட இயக்கங்கள் களமிறங்கியுள்ளன. இந்த நிலையில் இராமர் மற்றும் அயோத்தி தொடர்பாக நேபாள தலைமைஅமைச்சர் வெளியிட்ட கருத்தை அரசியலாக்காமல், வரலாற்று ஆய்வுகளுக்கு களமிறங்கியிருக்கிற ஒரு பரிணாம வளர்ச்சி என்று நேபாள வெளியுறவுத் துறை அமைச்சகம் தந்த விளக்கத்தைப் பார்க்க முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



