விஜய் சேதுபதி- தமிழினத்துரோகியாக உலகத்தமிழர்களால் பார்க்கப்படும், இலங்கையைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனாக நடிப்பதற்கு, எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. 29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள 800 படம் தொடர்பாக எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. இலங்கை துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல்பார்வை சுவரொட்டி அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். 800 படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தை சிங்களம், ஹிந்தி, வங்காளம், எனப் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் 800 திரைப்படம் முழுக்க ஒரு துடுப்பாட்ட வீரரின் வாழ்க்கை தொடர்பான படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையம்சம். மண்ணின் மக்களான ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையிலான காட்சிகள் இந்தப் படத்தில் இருக்காது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. பேரறிமுக எழுத்தாளர் ஜெயபாலன், நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிக்க ஒப்பந்தமான தகவல் கவலை தருகிறது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக இருப்பவர் முத்தையா முரளிதரன். விஜய்சேதுபதி எந்த எண்ணத்தில் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டிலும் தமிழ் மக்கள் நடுவிலும் விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல பெயர், அவரது இளம் அகவையிலேயே ஏற்பட்டிருக்கிறது. அதை இதுபோன்ற படத்தில் அவர் நடிப்பதன் மூலம் வீணாக்கி விடக்கூடாது. ஒருவேளை படத்தில் நடிக்க அச்சாரப் பணம் வாங்கி விட்டதாக விஜய் சேதுபதி கருதுவாரானால், அந்தப் பணத்தை வீதி, வீதியாக பிச்சை எடுத்தாவது நாங்கள் திருப்பித் தருகிறோம். எனவே, அவர் படத்தில் நடிக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், இனத்துரோகி முரளிதரன் வாழ்க்கை படத்தை தமிழ் நாட்டிலேயே திரையிட்டு விடலாம் எனும் எண்ணம் எங்கிருந்தது வந்தது? முரளிதரன் எனும் சிங்கள கைக்கூலியை கொண்டாடினால் தமிழர்களின் மனங்களில் இருந்து தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முரளிதரனின் வாழ்க்கையை காட்சிப்படுத்தி கொழும்பு வீதிகளில் வேண்டுமானால் திரையிடலாம். தமிழக வீதிகளில் ஒருநாளும் அது நடக்கப்போவதில்லை. ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக இப்படத்தில் இருந்து முற்றிலுமாக விலகும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தம்பி விஜய் சேதுபதிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன் என்று சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய வாழ்க்கைக்கதை படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என்று தெரிவித்திருக்கிறார். முரளிதரன் வெறும் துடுப்பாட்ட வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்ததுகூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப்பட்டுவந்தது. முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். வரலாறு பலகதைகள் சொல்லும் விஜய்சேதுபதி அவர்களே! எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் எட்டப்பன் என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியுமல்லவா? உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது. மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள் என்று திரைப்பட பாடலாசிரியர் தாமரை கூறியிருக்கிறார். அவர் விஜய் சேதுபதிக்கு எழுதியுள்ள திறந்த மடலில், விஜய் சேதுபதி அவர்களே! முத்தையா முரளிதரன் பற்றிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்த பின் எப்படிப் பின்வாங்குவது? என்று நீங்கள் தயங்கத் தேவையில்லை. அறிவியலர் ஸ்டீபன் ஹாக்கிங் 2013ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஒரு கல்வி ஒன்றுகூடலுக்கு வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இஸ்ரேல் நாட்டின் அதிபரும் அதில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் கொடுமைகளைக் கண்டித்து அவர் இம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல நண்பர்களும் கேட்டுக்கொண்டபோது அதை ஏற்று இஸ்ரேல் செல்வதில்லை என்று அறிவித்தார். இனவழிப்புக்கு நீதி கோரித் தமிழினம் கடினமான நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு இனக் கொலைக் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் இரண்டகருக்கு ஊக்கமளிப்பதாக இருந்துவிடக்கூடாது என விரும்புகிறேன் என்று எழுதியுள்ளார். நாமும் நமது வேண்டுகோளாக, 800 படத்தில் நடிக்க வேண்டாமே என்று விஜய்சேதுபதியை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



