நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்தாத வழக்கில் வரி விதிக்க தடை கோரி உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்து அறங்கூற்றுவர் அறிவுறுத்தலில் திரும்பப் பெற்றார். 29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்றைக்குள் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு 2 விழுக்காடு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி இன்றைக்குள் சொத்துவரி கட்டாவிட்டால் ரஜினி உள்பட பலருக்கும் 2 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்தாத வழக்கில் வரி விதிக்க தடை கோரி உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்திருந்தார். அவர் தனது மனுவில்:- கொரோனா தடுப்பு ஊரடங்கால் ராகவேந்திரா திருமண மண்டபம் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு என்பதால் மண்டபத்தை பதிவு செய்தவர்களுக்கு முன்தொகை திரும்ப செலுத்த தமிழக அரசு அறிவுறுத்தியதால் பணம் திரும்ப அளிக்கப்பட்டது. உரிய நாளுக்குள் சொத்து வரியை செலுத்தாவிட்டால் 2 விழுக்காடு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சியால் கவனஅறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்துவரியில் பாதி வரியை வசூலிக்க கோரி சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே சொத்து வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இதை விசாரித்த அறங்கூற்றுவர் அனிதா சுமந்த், செப்டம்பர் 23 தேதி கடிதம் அனுப்பிவிட்டு 29 அன்று வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு கிழமையில் எப்படி வழக்கு தொடர முடியும். கவனஅறிக்கை மீது நடவடிக்கை எடுக்க உரியகாலம் வேண்டாமா? சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நினைவூட்டல் கடிதம் தர வேண்டுமே என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து நினைவூட்டல் கடிதம் கொடுத்து விடுகிறோம் என்று கூறிய ரஜினி தரப்பு மனுவை திரும்பப் பெற அனுமதிக்க கோரியது. மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார் அறங்கூற்றுவர். இந்த சூழலில் சென்னை மாநகராட்சி இன்றைக்குள் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு 2 விழுக்காடு அபராதம் விதிக்கப்படும் என்று நேற்று இறுதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சொத்துவரியை இன்றைக்குள் செலுத்தி தங்களது சொத்து வரியின் மீது விதிக்கப்படும் ஆண்டுக்கு 2வீழுக்காடு தனிவட்டியை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநகராட்சியின் அறிவிப்பின் படி, ரஜினி உள்பட யாராக இருந்தாலும் இன்றைக்குள் வரி செலுத்தினால் மட்டுமே அபராதத்தில் இருந்து தப்ப முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



