இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுக்கு, ஈழம் என்ற உடனே உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நினைவு வந்து, ஆடிப்போய் விட்டார்கள் போல. 04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிரிட்டனில் இருந்து வெளிவரும் த கார்டியன் என்ற ஒரு இதழில், பயணிகளுக்கான வினாடி வினா போட்டி ஒன்றில் இலங்கை குறித்து கேட்கப்பட்டிருந்த கேள்வியால் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் அதிர்ச்சியானார்கள். அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த கேள்வி: ஈழம் என்பது எந்த பிரபலமான விடுமுறைத் தீவின் பூர்வீக பெயர்? என்பதுதான். போட்டியாளர் அந்தக் கேள்விக்கு விடைகளாகக் கொடுக்கப்பட்டுள்ள நான்கில் ஒன்றினை பதிலாகத் தேர்வு செய்ய வேண்டும். ஈழம் என்பது எந்த பிரபலமான விடுமுறைத் தீவின் பூர்வீக பெயர்? என்ற கேள்விக்கு நான்கில் ஒரு விடையாக இலங்கை குறிக்கப்பட்டிருந்தது. அதுதானே சரியான விடை! அதை குறிக்காமல் எப்படி விடுவார்கள்? ஆனால் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஈழம் என்ற உடனே உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நினைவு வந்து ஆடிப்போய் விட்டார்கள் போல. உடனே சிங்கள ஆட்சியாளர்கள் கூடிப்பேசி தி கார்டியன் இதழுக்கு மடல் எழுதி விட்டார்கள். தி கார்டியன் இதழின் இந்த போட்டியில் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட வினாவினால் இலங்கையில் சர்ச்சை தோன்றியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. எவரேனும் ஒருவர் சரியான பதிலாக இலங்கையை குறிப்பிடும் பட்சத்தில், அதில் இந்தத் தீவின் அண்மைய இராணுவக் கிளர்ச்சியை நடத்திய அமைப்பின் முழுப் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மேலதிக விளக்கம் வெளியாகும் என்று வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவிக்கிறது. இந்த தகவலைத் தவறானதாகக் குறிப்பிட்டு அதனை நீக்குமாறு ‘த கார்டியன்’ இதழுக்கு அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கடிதத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் பல்வேறு விடயங்களை த கார்டியன் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சித்தாந்தம் ஈழம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழம் என்ற பெயர் ஒருபோதும் இலங்கையின் பூர்வீகப் பெயராகப் பயன்படுத்தப்படவில்லை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே தி கார்டியன் இதழ், இலங்கை தீவு தொடர்பான அந்தக் கேள்வியை தமது இணையப் பக்கத்தில் இருந்து அகற்றிவிட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



