Show all

மதுவை மிகவும் முதன்மையாக்கும் மடமை வளர்கிறதா! ரசிகர்களை வரவழைக்க திரையரங்கில் மது விற்கலாம். பேரறிமுக இயக்குனர் யோசனை

திரையரங்கத் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பேரறிமுக இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளார்.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: திரையரங்கத் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பேரறிமுக இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவலால் திரையரங்குகள் 2 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு பழைய மாதிரி கூட்டம் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. கொரோனா தொடர்ந்து சில காலம் இருக்கும் என்றும், அதோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் உலக நலங்கு நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனவே திரையரங்குகள் திறந்த பிறகும் உள்ளே ஒரு இருக்கையை காலியாக விட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்த நிலையில் திரையரங்கத் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குகளுக்குள் மதுபானம் வினியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய பேரறிமுக இயக்குனர் நாக் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார். 

அவர் தனது கீச்சுப் பக்கத்தில், “படம் பார்க்க கொண்டாடிகளை இழுக்க திரையரங்குகளுக்குள் பீர், ஒயின் போன்ற மதுபானங்களை விற்க உரிமம் வழங்க வேண்டும். இதன்மூலம் திரையரங்கத் தொழிலை பாதுகாக்க முடியும். வெளிநாடுகளில் இதுபோல் திரையரங்குகளில் மதுபானங்களை விற்கும் முறை உள்ளது” என்று வற்புறுத்தி உள்ளார்.

திரையரங்குகளில் மதுபானம் கொடுத்தால் குடும்பத்தினர் படம் பார்க்க வரமாட்டார்கள் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த நாக் அஸ்வின், பலதிரை திரையரங்குகளில் மட்டுமாவது இதை நடைமுறைப்படுத்தலாம்’ என்றார்.

நிர்வாண நாட்டில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்கிற ஒரு சொலவடை புழக்கத்தில் உண்டு. பெங்களூரில் இளம் பெண்கள் மதுக்கடைகளில் தனி வரிசையில் நின்றது அண்மையில் வெளியான அதிர்ச்சியூட்டும் செய்தி. நல்லவேளை தமிழகத்தில் எந்த மதுக்கடையிலும் அப்படி பெண்கள் நிற்கவில்லை என்று ஆறுதலாக இருந்தது. அதையும் கூட மாற்றிவிடுவதற்கான முயற்சி தெரிகின்றன நடப்பு நிலவரங்களில்.

தமிழகத்தில் எண்பது விழுக்காட்டு மக்கள் டாஸ்மாக் திறக்கவேண்டாம் என்கின்றனர் என்று ஒரு இயங்கலை இதழ் கருத்து கணிப்பு நடத்தி செய்தி வெளியிட்டு இருந்தது. 

டாஸ்மாக்கை திறக்கக்கூடாது என்ற பலவழக்குகளை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் எதிர் கொண்டது. வழக்குகளின் அழுத்தத்தால் சென்னை அறங்கூற்றுமன்றமே அதிர்ந்து போய் டாஸ்மாக் திறக்கத் தடை போட்டது.

உச்சஅறங்கூற்றுமன்றமோ, மதுவே மனித இனத்தின் கட்டாயத் தேவையான பொருள் என்று அரசு கொள்கையாக வைத்திருக்கிறது. அதில் அறங்கூற்றுமன்றம் தலையிட வேண்டாம் என்று சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தின் கையையும் பின்னுக்கு இழுக்கிறது.

ழகரம் போல, வாழ்க்கைக்கான பொருள் இலக்கணம் போல, தமிழகத்திற்கென்று சில அழகுகளும், அடையாளங்களும் இருக்கின்றன. அதை சிதைக்க பல இனங்கள் பலஆயிரம் ஆண்டுகளாக முயன்றுதாம் வருகின்றன. ஆனால் தமிழகத்தின் எண்பது விழுக்காட்டு மக்கள் தன்னூக்கமாக மதுவை எதிர்கொள்வார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.