அமெரிக்க குடிஅரசுத் தலைவர் தேர்தல் குறித்த கருத்து கணிப்பில் டிரம்புக்குப் பின்னடைவு 06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் இன்னும் நான்கு மாதங்களில் குடிஅரசுத் தலைவர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கியிருக்கிறார். குடிஅரசுத் தலைவர் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தொடர்ந்து கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் அமெரிக்காவின் கின்னிபியாக் பல்கலைக்கழகம் கடந்த கிழமை தேசிய அளவில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கருத்துக் கணிப்பில் தற்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, டிரம்புக்கு ஆதரவாக 41 விழுக்காட்டு பேர்கள் மட்டுமே வாக்களித்தனர். அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு தரமாக 49 விழுக்காட்டு பேர்கள் வாக்களித்தனர். இதன் மூலம் டிரம்பை விட ஜோ பிடன் 8 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல் கொரனோ நுண்நச்சை எதிர்கொண்ட விதம், வேலை இழப்பு பொருளாதார சரிவு உள்ளிட்ட முன்னெடுப்புகளில் டிரம்பின் தலைமைக்கு எதிராக 55 விழுக்காட்டு பேர்கள் வாக்களித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



