Show all

இந்திய இராணுவம் புதிய பாலத்தைக் கட்டி முடித்துள்ளது! சீன இராணுவத்தினரின் இடையூறுகளை மீறி, லடாக்கில் கல்வான் ஆற்றில்

தற்போது லடாக்கில், சீன இராணுவத்தினரின் இடையூறுகளை மீறி, கல்வான் ஆற்றில், இந்திய இராணுவம், புதிய பாலத்தை கட்டி முடித்துள்ளது.

06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கல்வான் ஆறு என்பது சீனாவின் மேற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து இந்தியாவின் சம்மு காசுமீர் வரை பாய்கின்ற ஒரு ஆறாகும். சாம்சுங்லிங் என்ற பகுதியில் தோன்றும் இந்த ஆறு மேற்கு நோக்கிப் பாய்ந்து சியோக் ஆற்றுடன் இணைகிறது. 

சுமார் 80 கிலோமீட்டர் நீளத்திற்குப் பாயும் இவ்வாற்றில் நீரின் வேகமும் அதிகமாகும். இந்தியாவின் லடாக் பகுதியைச் சேர்ந்த குலாம் ரசூல் கால்வான் என்பவரின் வீரதீரச் செயல்களை பாராட்டும் நினைவாக பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள், இந்த ஆற்றுக்கு கால்வான் ஆறு எனப்பெயரிட்டனர்.

கல்வான் ஆறும், கால்வான் பள்ளத்தாக்கும் லடாக்கின் வடமேற்கு நிலப்பகுதியான அக்சாய் சின்னில் உள்ளன. இப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே சர்ச்சை நீடிக்கிறது 

ஆனாலும்கூட இப்பகுதி தமிழ்த்தொடராண்டு-5061 (1959) ஆண்டு முதல் சீனக்கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பள்ளத்தாக்கின் தரைப்பகுதி மிகவும் கடினமாக இருக்கிறது. தமிழ்த்தொடராண்டு-5064 (1962) ஆம் ஆண்டில் இந்தியா இப்பகுதியில் தன்னுடைய படைஅணியை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் அப்போது நடைபெற்ற இந்தியச் சீனப் போரில், சீனா வெற்றி பெற்று இப்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

தற்போது லடாக்கில், சீன இராணுவத்தினரின் இடையூறுகளை மீறி, கல்வான் ஆற்றில், இந்திய இராணுவம், புதிய பாலத்தை கட்டி முடித்துள்ளது.

லடாக்கில், கல்வான் ஆற்றின் மீது குறுகலான நடைபாதை இருந்தது. இதை அகற்றி, 60 மீட்டர் பாலம் கட்டும் பணியை இராணுவ நடவடிக்கைகளுக்காக கமுக்க நிலைபாடாக இந்தியா மேற்கொண்டதாகத் தெரியவருகிறது.

இதுதான் சீனாவிற்கும் நமது இராணுவத்திற்கும் இடையிலாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் மோதலுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்தியா இந்தக் கட்டுமான நடவடிக்கையில் மேற்கொண்டு வரும் கமுக்க நிலையை- சீன இராணுவம் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இந்த மோதலில் முன்திட்டத்தோடு கடுமையான தாக்குதல் கருவிகளை கொண்டு இந்திய இராணுவத்தினரை எதிர்பாராத வகையில் தாக்கியிருக்கிறது. இந்திய இராணுவத்தினரை கைது எல்லாம் செய்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். 

நடுவண் பாஜக அரசு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நமது இந்திய இராணுவத்தினரை பலிகடா ஆக்கியிருப்பதாக காங்கிரஸ் கடுமையான குற்றம் சாட்டி வருகிறது.

கல்வான் பகுதியில், இந்திய - சீன இராணுவத்தினரின் மோதலுக்கு இடையிலும் பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று, முடிவடைந்துள்ளது. இதன் மூலம், இந்திய ராணுவம், கல்வான் ஆற்றைக் கடக்க முடியும். அத்துடன், தர்புக் - தவுலத் பெக் ஓல்டி வரையிலான, 255 கி.மீ., சாலையை பாதுகாக்கவும், காரகோரம் கணவாய்க்கு தெற்கே, கடைசியாக உள்ள ராணுவ முகாமுக்கு சுலபமாக செல்லவும் முடியும். இந்தப் பாலம், ஷையோக் - கல்வான் ஆறுகள் சந்திப்பில் இருந்து, 3 கி.மீ., தூரத்தில் உள்ளது. ராணுவத்தின், 14வது கண்காணிப்பு முகாம் அருகே உள்ள இந்த பகுதியில் தான், சீனா - இந்திய ராணுவத்தினரின் மோதல் நிகழ்ந்தது.

கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்கை முழுவதுமாக கைப்பற்றி, இந்தியாவின் எல்லையை, ஷையோக் ஆற்றுடன் நிறுத்த வேண்டும் என்பது தான், சீனாவின் திட்டம். அப்படிச் செய்தால், அங்கிருக்கும் சாலையை சொந்தமாக்கி, தவுலத் பெக் ஓல்டி உடனான இணைப்பை துண்டிக்கலாம். அங்கிருந்து, முர்கோ வழியாக பாகிஸ்தானுக்கு சாலை அமைக்கலாம் என்பதும், சீனாவின் சமீபத்திய ஆக்ரமிப்பு திட்டத்திற்கு முக்கிய காரணம். தற்போது, கல்வான் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், இந்திய ராணுவ வாகனங்கள் ஆற்றை கடக்கவும், பிற வழிகளில் சீன ராணுவம் வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுக்கவும் முடியும். இந்தியத் தரப்பில் தற்போது தெரியவருகிறது.

எல்லையில் அதிகாரப்பாடாக இந்தியா தனது பகுதிகளை வரையறுத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த நடவடிக்கையை இருநாடுகளுமே வெளியில் தெரிவிப்பது தங்களுக்கான பாதுகாப்பு இன்மையாக கருதுவதால் அதிகாரப்பாடாக இரண்டு நாடுகளுமே கமுக்கத்தைக் கடைபிடிக்க- பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இந்திய இராணுவத்தினர் ஆகிவிட்டனர் என்று யூகச் செய்திகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.