05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் கடந்த இரண்டு கிழமைகளுக்கு மேலாக கனமழை பெய்து மாநிலத்தை வெள்ளக் காடாக மாற்றியது. தற்போது மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் தங்கள் வீடுகளைப் பார்க்கச் செல்கின்றனர். வீடுகளில் தேங்கியிருக்கும் மழை நீர் சற்று வடியத் தொடங்கியுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய வீடுகள்தான் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் அறிவித்தார். வரலாறு காணாத இந்த சேதத்தால், கேரள கனமழையை தீவிர இயற்கைப் பேரிடராக நடுவண் அரசு அறிவித்தது. இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன், ஐக்கிய அரபு எமிரேட், கேரள வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.700 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார். முன்னர், ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைமை அமைச்சர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மேக்தம் கேரள வெள்ளம் குறித்து பகிர்ந்த கீச்சுப் பதிவில், ஐக்கிய அரபு நாடுகளின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு கேரள மக்களின் பங்கு அதிகம். தற்போது வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவுக்கு சிறப்பு உதவி செய்வது மிக அவசியம் என குறிப்பிட்டிருந்தார். கேரளாவுக்காக ஐக்கிய அரபு எமிரேட் அரசு மட்டுமன்றி அங்கு வசிக்கும் தொழிலதிபர்களும் தொடர்ந்து நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட் அரசுக்கும் அந்த மண்ணிலிருந்து உதவி வரும் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும், கேரள மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,886.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



