Show all

மலேசியாவில் ஒரு மோடி! பொறுப்பில்லா திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள்; மலேசியா சில்லறை நாணயங்கள் 40 டன் கிடப்பில்

05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மலேசியாவில், 5 சென், 10 சென், 20 சென், 50 சென், 1 ரிங்கிட் என்ற சில்லறை நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வந்தன. மலேசியாவின் நடுவண் வங்கி அவற்றை கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு மதிப்பிழப்பு செய்தது. அவற்றுக்கு பதிலாக 1 ரிங்கிட் நோட்டை வெளியிட்டது. அதன் பின் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நாணயங்களை மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்தது.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்திடம் மலேசியாவைச் சேர்ந்த சில்லறை நாணயங்கள் 40 டன் அளவுக்கு மாற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. அவற்றை மாற்றிக் கொள்ள தேவஸ்தானம் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. தற்போது, மலேசியாவின் ஒரு ரிங்கிட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17-ஆக உள்ளது. கடந்த பதினைந்து  ஆண்டுகளுக்கு முன்பு வரை தேவஸ்தானம், வெளிநாட்டு நாணங்களை அவற்றின் எடைக்கு ஏற்பவிற்று, இந்திய ரூபாயாக மாற்றி வந்தது.

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நாணயத்தின் மதிப்பை வைத்து, அதற்கு ஏற்ற வகையில் இந்திய பணமாக தேவஸ்தானம் மாற்றி வந்தது. அதன் பின், வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடைமுறை நின்று போனது. அதனால், அவை தேவஸ்தானக் கருவூலத்தில் மலைபோல் குவியத் தொடங்கின.

வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடவடிக்கையை தேவஸ்தானம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் மேற் கொண்டது.

நாணயங்களின் மதிப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரியது. வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற முகவர்களுக்கு மட்டுமே வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் அதிகாரம் உள்ளது.

அதன்படி, கோடக் மகீந்திரா வங்கி மட்டும் ஒப்பந்தப்புள்ளி அனுப்பியது. அதில் ஒரு சென் மலேசிய நாணயத்திற்கு 4 பைசா, 5 சென்னிற்கு 12 பைசா, 10 சென்னிற்கு 40 பைசா, 20 சென்னிற்கு ஒரு ரூபாய், 50 சென்னிற்கு ரூ.2.80, ஒரு ரிங்கட்டிற்கு 40 பைசா என்ற ரீதியில் அளிக்கத் தயாராக உள்ளதாக அந்த வங்கி குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அதை தேவஸ்தானம் நிராகரித்தது. அதன்பின், நடப்பு ஆண்டில் மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரியது. அப்போது கோடக் மகீந்தரா, சென்காயின்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் உள்ளிட்டவை ஒப்பந்தப்புள்ளி அனுப்பின.

அதில் இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் நிறுவனம், ஒரு ரிங்கிட்டிற்கு 5 பைசாவும், கோடக் மகீந்தரா 49 பைசாவும் அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தன. ஒரு ரிங்கட்டின் மதிப்பு ரூ.17 ஆக இருக்கும் நிலையில், வெறும் 49 பைசா மட்டும் அளிப்பதா? என்று தேவஸ்தானம் அதை நிராகரித்தது.

மலேசியாவில் பண மதிப்பிழப்பு செய்து பயன்பாட்டில் இல்லாத நாணயங்களுக்கு, எவ்வாறு முழு மதிப்பு அளிப்பார்கள் என்பதை தேவஸ்தான அதிகாரிகள் யோசிக்கத் தவறிவிட்டனர். அவர்களின் அலட்சியப் போக்கால் தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மலேசியா தனது பணத்தை மதிப்பிழப்பு செய்தபோது, அதற்கென அளிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சில்லறை நாணயங்களை தேவஸ்தானம் மாற்றியிருந்தால், இது போன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.

தற்போது கைவசம் உள்ள மலேசிய நாணயங்களுக்கு நிகரான மதிப்பு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது (பல கோடி மதிப்பில்) இந்தியப் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதையும் தேவஸ்தான அதிகாரிகள் நிராகரிக்க வேண்டிய அவசியம் என்ன? இன்றும் காலம் தாழ்த்தினால், 40 டன் நாணயங்களையும் தேவையற்ற சுமையாக தேவஸ்தானம் சுமக்க வேண்டி வரும்.

ஏற்கனவே டன் கணக்கில் குவிந்துள்ள இந்திய நாணயங்களை சேலம் உருக்காலையில் உருக்குவதற்கு தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாற்ற முடியாமல் 40 டன் மலேசிய நாணயங்கள் கணக்கில் குவிந்துள்ளதால் தேவஸ்தான அதிகாரிகள் குழப்பமான நிலையில் உள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,886.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.