இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில், சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பு உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அண்மையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து அந்நாட்டில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளும் அந்த மாநாட்டை புறக்கணித்ததால், அதனை ஒத்திவைக்க வேண்டிய நிர்பந்தம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. பயங்கரவாதிகளை உருவாக்கும் நாடு பாகிஸ்தான் என்ற இந்தியாவின் கருத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகி வருகிறது. ஆசியப் பிராந்தியத்தில் மிகவும் வலுவான பொருளாதார சக்தியாகவும் இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்நிலையில், ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கில் தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதில், சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய குடியரசு நாடுகள் பாகிஸ்தானுடன் கைகோக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழு உறுப்பினர் முஜாகீத் ஹுசைன் சையது, தெற்காசிய கூட்டமைப்பு ஏற்கெனவே உருவாகிவிட்டது. இதில் சீனா, ஈரான், மத்திய ஆசிய நாடுகள் இடம் பெறும். பாகிஸ்தான் - சீனா இடையே உருவாக்கப்படும் பொருளாதார வழித்தடம் தெற்காசியாவையும், மத்திய ஆசியாவையும் பொருளாதார ரீதியாக இணைக்கும் பாலமாக செயல்படும். இத்திட்டத்தில் இந்தியாவும் இணைய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



