சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து பேசி வரும் மனோகர் பாரிக்கரை யாராவது கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நள்ளிரவில் சர்ஜிக்கல் தாக்குதலினை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம்கள் பல அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் குறித்த சந்தேகங்களை எழுப்பிய காங்கிரஸ் கட்சி அதற்கான ஆதாரங்களை வெளியிடும்படி வலியுறுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்திய ராணுவம் இதற்கு முன்பு துல்லியமான தாக்குதல்கள் நடவடிக்கை எடுத்தது கிடையாது என்று ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கரின் கருத்துக்கு முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பாரிக்கர் சொன்ன கருத்திற்காக நான் வருத்தப்படுகிறேன். அவர் இந்திய ராணுவத்தையும், நமது நாட்டினையும் அவமதித்து விட்டார். சர்ஜிக்கல் தாக்குதல் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு சுமையாகவும், விரக்தியாகவும் இருந்ததாக அவர்(பாரிக்கர்) கூறினார். அவரை யாராவது கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக மும்பையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் மனோகர் பாரிக்கர் பங்கேற்று சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து பேசியதன் விவரம்: துல்லியமான தாக்குதல்களைத் தொடர்ந்து, அதில் திருப்தியுற்ற மக்களின் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். நான் கடந்த 2 ஆண்டுகளாக ராணுவ அமைச்சராக இருக்கிறேன். எனக்கு தெரிந்தவரையில், இத்தகைய துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகள் முந்தைய ஆண்டுகளில் நடைபெற்றது கிடையாது. அவர்கள் கூறுவதெல்லாம், எல்லை பாதுகாப்பு குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையைத்தான். இவை உலகமெங்கும் நடக்கிற சாதாரண சம்பவங்கள்தான். இந்திய ராணுவமும் செய்ததுதான். இத்தகைய நடவடிக்கைகள், அரசின் உத்தரவு இல்லாமல் அல்லது முன் அனுமதி பெறாமல் செய்வது ஆகும். அதன்பிறகு அறிக்கை அளிப்பார்கள். ஆனால் இந்த முறை நடத்தியது துல்லியமான தாக்குதல் நடவடிக்கைதான். ஏனென்றால், முடிவு எடுத்து, தெரிவிக்கப்பட்டது. ராணுவம் அதை திறம்பட செய்து முடித்துள்ளது. யாரெல்லாம் சர்ஜிக்கல் தாக்குதல் நடந்ததா என சந்தேகப்பட்டார்களோ அவர்கள் வேண்டுமானாலும் அந்த பெருமையை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், சர்ஜிக்கல் தாக்குதலின் வெற்றி, ஒவ்வொரு இந்தியனுக்கும் உரித்தானது. எந்த ஒரு அரசியல் கட்சிக்குமானது அல்ல. அது நமது ராணுவத்தால் செய்யப்பட்ட தாக்குதல். எனவே சந்தேகப்படும் நபர்களும் அதில் உரிமை கோரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



