ஜம்மு காஷ்மீர் பாம்போர் அரசு கட்டிடத்தில் புகுந்த தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டர் முடிவிற்கு வந்தது. 60 மணி நேரம் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். இந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்கிடையே காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் தன்கட்கரில் எல்.ஓ.சி.யில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள இந்திய மாநிலம் ஆகும். அந்த மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்த எல்லை வழியாக தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பி வருகிறது. அந்த தீவிரவாதிகள் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருகிறார்கள். காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் எல்லை பகுதியாகும் . அங்கு யுரி ராணுவ முகாமில் கடந்த மாதம் 18ம் தேதியன்று ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியானார்கள். மேலும் 30 வீரர்கள் காயம் அடைந்தார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலை வேடிக்கை பார்க்க முடியாது என பகிரங்கமாக எச்சரித்த பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இந்திய ராணுவம் கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவு எல்லை கட்டுப்பாடு கோடு(எல்.ஓ.சி.) பகுதியை கடந்தது. இந்திய ராணுவ குழு, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டு இருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது. இந்த தாக்குதலில் 38பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். மேலும் அங்கிருந்த இதர தீவிரவாதிகள் பாகிஸ்தான் உள் பகுதிக்குள் ஓடி ஒளிந்தனர். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று தன்கட்கரில் இரு தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றார்கள். அவர்களது முயற்சியை ராணுவம் சிறப்பாக முறியடித்தது. மேலும் அந்த இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என தேடுதல் வேட்டை தொடருகிறது. காஷ்மீரில் பாம்போர் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் கட்டிடத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஊடுருவினர். அந்த அரசு கட்டிடத்தில் புகுந்த ஒரு தீவிரவாதி செவ்வாய்க்கிழமையன்று கொல்லப்பட்டார். இரண்டாவது தீவிரவாதி நேற்று (புதன்)கொல்லப்பட்டார். 3வது தீவிரவாதி அரசு கட்டிடத்திற்குள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அங்கு யாரும் இல்லை என்பது சோதனையில் தெரிய வந்தது. பாம்போரில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து 60 மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அந்த தாக்குதலின் போது ராணுவத்தினர் வேகமாக முன்னேறாமல் தீவிரவாதிகளின் தந்திரத்தை அறிந்து கவனமாக முன்னேறினார்கள். இந்த பயிற்சி நிறுவனக் கட்டிடத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் புகுந்த போது 5 ராணுவ வீரர்களை கொன்றார்கள். எனவே தற்போதைய என்கவுன்ட்டரில் ராணுவத்தில் உயிரிழப்பு இருக்கக்கூடாது என்று கவனமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று டிரால் பகுதியை சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து பிரிவினை வாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். கடந்த 95 நாட்களாக அந்தப் பகுதியில் இயல்பு வாழ்க்கை முடங்கி ஊரடங்கு உத்தரவும் பெரும் பாலான இடங்களில் அமலில் உள்ளது. போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் கடந்த 3 மாதத்தில் இரு காவல்துறையினர் உள்பட 84 பேர் இறந்துள்ளனர். 10ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



