கொரோனா பாதிப்பில் உலகின் முதலாவது இடத்தை பற்றிட காரணமாகி விட்ட ஆளும் பாஜக அரசுக்கு, ‘உயிர்வளி, மற்றும் தடுப்பூசிக்கு தேசியக் கொள்கை வேண்டும்’ என்று இந்திய உச்ச அறங்கூற்று மன்றம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய கட்டாயத்தின் அவலத்தில் இருக்கும் இந்திய மக்களுக்கு, செவ்வாயில் உயிர்வளி சாத்தியம் எனும் செய்தியைக் கொண்டாட வலிமையில்லை. 09,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: முதன்முறையாக மற்றொரு கோளான செவ்வாயில் குட்டி உலங்கி ஒன்றை பறக்க விட்டு அண்மையில் சாதனையொன்றை நிகழ்த்தி முடித்துள்ளது நாசா. இன்னும் அதைக் கண்டு உலகம் வியந்து கொண்டிருக்க இன்னொரு முதன்மை ஆராய்ச்சியிலும் இப்போது வெற்றிகண்டிருக்கிறது அது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயும் புவி போன்ற ஒரு கோளாகவே இருந்திருக்கும், அப்போது அங்கு உயிர்கள் வாழ்ந்திருந்தாலும் வியப்படைவதற்கில்லை என்கின்றன அண்மைய ஆய்வுகள். இந்தக் கூற்று உண்மையா என்பதை கண்டறியும் நோக்கத்தோடு செவ்வாய்க்கு பெர்ஸிவியரன்ஸ் என்னும் ரோவரை அனுப்பிவைத்தது நாசா. மிகவும் சிக்கலான ஜெசிரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக இந்த ரோவர் தரை இறக்கப்பட்டது. அப்போதிலிருந்தே விண்வெளி ஆராய்ச்சியில் அன்றாடமொரு புதிய மைல்கல்லை எட்டிகொண்டே இருக்கிறது நாசா. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்டதிலேயே அதிநவீன ரோவர் பெர்ஸிவியரன்ஸ்தான். உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை தேடுவதுதான் இந்தத் தேடலின் முதன்மை நோக்கம் என்றாலும், கூடுதலாக சில பாடுகளையும் இதனுடன் சோதனை செய்து கொண்டிருக்கிறது நாசா. வருங்காலத்தில் செவ்வாயில் செய்யவிருக்கும் ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்படும் தொழில் நுட்பங்களை தற்போது ஒத்திகை பார்த்துவருகிறது நாசா. இதற்காக பெர்ஸிவியரன்ஸ் ரோவர் பல்வேறு குட்டி குட்டி சாதனங்களையும் தன்னுள்ளே வைத்தே இந்தப் பயணத்தைப் பூவியிலிருந்து தொடங்கியது. அந்தச் சாதனங்களைக் கடந்த சில நாட்களாக ஒவ்வொன்றாகச் சோதனை செய்து பார்த்து வருகிறது நாசா. சில நாட்களுக்கு முன் இன்ஜெனியூவிட்டி என்ற குட்டி உலங்கியை செவ்வாயில் பறக்க செய்து விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல் எட்டியது நாசா. நேற்று, பெர்ஸிவியரன்ஸ் ரோவரோடு அனுப்பப்பட்டிருந்த மாக்சி என்னும் சாதனத்தை சோதனை செய்து அதிலும் வெற்றி கண்டிருக்கிறது. செவ்வாயில் அதிகம் காணப்படும் கரியிரட்டை உயிர்வளியிலிருந்து மனிதன் மூச்சிழுக்கும் உயிர்வளியை உற்பத்தி செய்வதே மாக்சியின் வேலை. செவ்வாயின் வளிமண்டலம் 95 விழுக்காடு கரியிரட்டை உயிர்வளியாலேயே நிறைந்திருக்கிறது. மீதம் இருக்கும் 5 விழுக்காட்டில் நைட்ரஜன் மற்றும் ஆர்கான் காற்றுகள் அதிகளவில் நிறைந்திருக்கிறது. செவ்வாயின் வளிமண்டலத்தின் உயிர்வளியின் அளவு மிக மிகக் குறைவு. வருங்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களைச் செவ்வாய்க்கு அனுப்பும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டி இருந்தால், அங்கு அவர்கள் உயிர் வாழ்வதற்கு உயிர்வளி கட்டாயம். இது இல்லாமல் விண்கல எரிபொருட்களுக்கும் உயிர்வளி கட்டாயம். செவ்வாயில் இருக்கும் கரியிரட்டை உயிர்வளியில் இருந்து உயிர்வளியைப் பிரித்தெடுக்க முடிந்தால், இனி வரும் திட்டங்களுக்கு மிகவும் உதவிகரமாக அது அமையும் என்ற நோக்கில்தான் பெர்ஸிவியரன்ஸோடு மாக்சியும் சேர்த்து அனுப்பப்பட்டது. செவ்வாய்க்கிழமையன்று செவ்வாயில் மாக்சியின் சோதனை தொடங்கியது. முதல் சோதனையில் சுமார் 5 கிராம் அளவிலான உயிர்வளியை உற்பத்தி செய்தது மாக்சி. 5 கிராம் என்பது மனிதன் சராசரியாக 10 நிமிடங்களில் மூச்சிழுக்கும் உயிர்வளி அளவு. ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் அளவிலான உயிர்வளியை உற்பத்தி செய்யும் திறனோடு மாக்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனத்தில் அடுத்த இரண்டு ஆண்டு காலத்திற்குள் 9 முறை இதே போன்ற சோதனையை நடத்தத் திட்டமிட்டுள்ளது நாசா. வெவ்வேறு வகையான சூழ்நிலைகள் மற்றும் வானிலைகளில் அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்தச் சோதனைகளை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர். இந்த அளவிலான கருவியைக் கொண்டு விண்வெளி வீரர்களால் தேவையான உயிர்வளியை உற்பத்தி செய்ய முடியமா என்றால், கண்டிப்பாக முடியாது. இது வெறும் சோதனை மட்டுமே. செவ்வாயில் உயிர்வளியை நம்மால் உற்பத்தி செய்ய முடியுமா என்பது இதிலிருந்து தெரிந்துவிடும். மாக்சியின் முதன்மை நோக்கமே அதுதான். நான்கு விண்வெளி வீரர்கள் செவ்வாயில் இருந்து விண்கலத்தில் திரும்ப 7 மெட்ரிக் டன் எரிபொருளுடன், 25 மெட்ரிக் டன் அளவு உயிர்வளியும்; தேவைப்படும். 25 மெட்ரிக் டன்கள் உயிர்வளியை பூவியில் இருந்து விண்கலத்துடன் அனுப்புவதை விட, 1 மெட்ரிக் டன் எடையிலான உயிர்வளியைப் பிரித்தெடுக்கும் கருவியை அனுப்புவது எளிது எனத் தெரிவித்திருக்கிறார் மாக்சியின் முதன்மை ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஹெக்ட் ஆனாலும் கொரோனா பாதிப்பில் உலகின் முதலாவது இடத்தை பற்றிட காரணமாகி விட்ட ஆளும் பாஜக அரசுக்கு, ‘உயிர்வளி, மற்றும் தடுப்பூசிக்கு தேசியக் கொள்கை வேண்டும்’ என்று இந்திய உச்ச அறங்கூற்று மன்றம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய கட்டாயத்தின் அவலத்தில் இருக்கும் இந்திய மக்களுக்கு, செவ்வாயில் உயிர்வளி என்பதை கொண்டாட வலிமையில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.