ஆயிரக்கணக்கான வடஇந்திய உழவர் போராளிகள், நீண்ட காலமாக தனிக் குழுவாக, வெட்டவெளியில், போராடி வரும் நிலையில் அவர்களைக் கொரோனாவும், அவர்கள் கொரோனாவையும் கண்டு கொள்ளவில்லை என்பது போராட்டச் சோகத்திலும் சுகமான செய்தியாகும். 10,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: வேளாண் சட்டங்கள் என்ற தலைப்பில், ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றிய, இரண்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மூன்று சட்டங்களைக், கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த உழவர்கள் தொடர்ந்து சலிப்பில்லாமல் தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த குடியரசு நாளன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உழவர்களின் போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி ஒன்றிய பாஜக அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட கலந்துரையாடலில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் போராட்டத்தை முடித்துக் கொள்ள உழவர்கள் அணியமாக இல்லை. வேளாண் சட்டங்கள் என்ற தலைப்பிலான இரண்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மூன்று சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று உழவர்கள் திட்டவட்டமாக கூறினார்கள். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை வீசி வருகிறது. அதுவும் தலைநகர் டெல்லியின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. கட்டுடக்கடங்காமல் அதிகரிக்கும் தொற்றுகள், நோயாளிகளை சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடமில்லாதது, மருத்துவனையில் இருக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க போதுமான உயிர்வளி இல்லாதது என டெல்லி திண்டாடி வருகிறது. டெல்லியில் உயிர்வளித் தட்டுபாடால் நோயாளிகள் தொடர்ந்து இறப்பதால் அங்கு விமானப்படை மூலம் உயிர்வளி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இவ்வாறு அவசர தேவைக்கு உயிர்வளி வாகனங்கள், சடுதி வண்டிகள் செல்வதற்கு வசதியாக டெல்லி சிங்கு எல்லையில் இருக்கும் தடுப்புகள் அகற்றப்படும் என்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உழவர் சங்க தலைவர்கள் கூறினார்கள். பொதுமக்களுக்கு எந்த வகையிலும் சிரமம் ஏற்படுத்த விரும்ப மாட்டோம். சிங்கு எல்லையில் அவசர கால தேவைக்கு தடுப்புகள் அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்படும் என்று உழவர் சங்க தலைவர்கள் கூறினார்கள். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட குஜராத் ஐபிஎல் துடுப்பாட்டம், உத்தர்கண்டில் இலட்சகணக்கில் பக்தர்கள் குவிய முன்னெடுக்கப்பட்ட கும்பவிழா, ஐந்து மாநிலங்களில், கருத்துப் பரப்புதல்களுக்குத் அரசியல்வாதிகள் தொண்டர்களோடு அலைய, மாதக்கணக்கில் தேர்தல் நடத்தி அலைகழித்த தேர்தல் ஆணையம் ஆகியன- கொரோனா பாதிப்பையும், கொரோனா உயிர்ப்பலிகளையும் உருவாக ஊக்குவித்த நிலையில்- ஆயிரக்கணக்கான வடஇந்திய உழவர் போராளிகள், நீண்ட காலமாக தனிக் குழுவாக, வெட்டவெளியில், போராடி வரும் நிலையில் அவர்களைக் கொரோனாவும், அவர்கள் கொரோனாவையும் கண்டு கொள்ளவில்லை என்பது போராட்டச் சோகத்திலும் சுகமான செய்தியாகும்.
இந்தப் போராட்டம், இந்தியக் குடியரசு நாளுக்கு 62 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு குடியரசு நாளுக்குப் பின்பும் 87 நாட்கள் கடந்தும் 149 நாளாக, இந்திய வரலாறு காணாத நீள் போராட்டமாகத் தொடரப்பட்டு வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.