Show all

ஸ்டாலின் கேள்வி! அனைவருக்கும் தடுப்பூசி அறிக்கை ஒன்றிய அரசுக்கு- அதற்கான செலவு மாநில அரசுக்கா?

கொரோனா பாதிப்பில் உலகின் முதலிடத்திற்கு வந்துவிட்ட இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்குமாம் ஒன்றிய பாஜக அரசு. செலவை மாநிலங்களே செய்து கொள்ள வேண்டுமாம் என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

09,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய அரசுக்கு வழங்குவதைப் போலவே, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு தடுப்பூசியை 150 ரூபாய் என்ற விலைக்கு சீரம் நிறுவனம் வழங்கிட வேண்டும் என்றும் அதற்குரிய கூடுதல் நிதியையும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோhனா பாதிப்பில் உலகின் முதலிடத்திற்கு வந்துவிட்ட இந்தியாவில் அடுத்த கிழமை முதல் 19 அகவைக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து வரவு சார்ந்த வகைகளுக்கும், ஒரேநாடு என்று மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து வந்த ஒன்றிய பாஜக அரசு- மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று, செலவு சார்ந்த இந்த கொரோனா பாதிப்புக்கான நடவடிக்கையில் மாநிலங்களுக்கு உரிமை வழங்கியுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசிகளின் விலை குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. அதன்படி ஒன்றிய அரசுக்கு 150 ரூபாய்க்கும் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும் தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு வழங்கும் அதே விலையில் கொரோனா தடுப்பூசிகளை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசின் பாரபட்ச மனநிலையைக் கண்டித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களே நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்றியபாஜக அரசு அறிவித்தது. இந்தி நிலையில், கோவிசீல்டு தடுப்பூசியை ஒன்றிய அரசுக்கு 150 ரூபாய்க்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ள சீரம் நிறுவனம், மாநில அரசுகளுக்கான விலையை 400 ரூபாயாக உயர்த்தியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது. 

ஒன்றிய அரசுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளுக்கு அந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்கூட்டியே 4500 கோடி ரூபாயை ஒன்றிய அரசு இப்போது செலுத்துகிறது. ஆனால் மாநில அரசுகள் உடனடியாக நிதிக்கு எங்கே போகும்? ஒன்றிய அரசு அறிவித்துள்ள ‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற திட்டத்தை எப்படிச் செயல்படுத்த முடியும்? 

மேலும் ஒன்றிய அரசுக்கு 150 ரூபாய்க்கு தடுப்பூசியை விற்பனை செய்ய முன்வரும் அந்தத் தயாரிப்பு நிறுவனம் - மாநில அரசுகளுக்கு மட்டும் 400 ரூபாயாக விலையை உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம்? 

சரக்குசேவை வரியில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியே இன்னும் நிலுவையில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு கேட்ட நிதியையும் இதுவரை முழுமையாக ஒன்றிய பாஜக அரசு வழங்கிடவில்லை. ஏற்கனவே மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் சூழலில் தமிழ்நாடோ அல்லது பிற மாநிலங்களோ தடுப்பூசி விலை ஏற்றத்தின் சுமையை எப்படித் தாங்க இயலும்? 

எனவே ‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற அறிவிப்பைத் தமிழகத்தில் செயல்படுத்தி - தமிழக மக்களைப் பாதுகாத்திட, தடுப்பூசியின் விலை ஏற்றத்தை முதலில் உடனடியாகத் தடுத்திட வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.