யோகா பயிற்சி செய்பவர்கள் கரோனா நுண்நச்சால் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவு என்று நடுவண் ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கருத்து தெரிவித்துள்ளார். 08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: யோகா பயிற்சி செய்பவர்கள் கொரோனா நுண்நச்சால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகக்குறைவு என்று நடுவண் ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கருத்துத் தெரிவித்துள்ளார். பன்னாட்டு யோகா நாள் ஆண்டுதோறும் நாளது 7,ஆனி (சூன்21) ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் பன்னாட்டு யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் அவை அறிவிக்க வேண்டும் என இந்திய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி ஐநா பொது அவையில் நாளது 08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122 அன்று (27.09.2014) வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். அந்த வேண்டுகோளின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் பொதுஅவை 7,ஆனி (சூன்21) நாளை 'பன்னாட்டு யோகா நாளாக” அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 6-வது பன்னாட்டு யோகா நாள், நேற்று பாஜகவினராலும், பாஜக சார்பு நிறுவனங்களால் மட்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு யோகா நாளின் கருப்பொருளாக “இல்லத்தில் யோகா செய்வோம், குடும்பத்தோடு யோகா செய்வோம்” என்று அமைத்துக் கொண்டனர். தலைமைஅமைச்சர் மோடி, நடுவண் உள்துறை அமைச்சர் அமித்சா ஆகியோர் பன்னாட்டு யோகா நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அமித்சா, “இந்தியக் கலாச்சாரத்துக்கும், மனித சமூகத்துக்கும் தனிச்சிறப்பான பரிசு யோகா. தலைமைஅமைச்சர் மோடியின் அயராத முயற்சிகளின் காரணாக இன்று உலகம் யோகா கலையை ஏற்றுக்கொண்டுள்ளது. உலக நாடுகள் யோகா கலையை ஏற்று யோகா நாளைக் கடைப்பிடிக்கின்றன” என்று அமித்சா தெரிவித்துள்ளார். நடுவண் ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக், கோவாவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வானவர். கோவா தலைநகர் பனாஜி அருகே இருக்கும் தனது சொந்த ஊரான இராபந்தர் கிராமத்தில் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் மக்களுடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்தார். பிறகு அவர் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், “கொரோனா நுண்நச்சுக்கு எதிராகப் போராட யோகா உதவி புரியும் என்பதை நாடு முழுவதும், உலகம் முழுவதும் தலைமைஅமைச்சர் மோடி தலைமையிலான அரசு கருத்துப்பரப்புதல் செய்யும். இந்தக் கருத்துப் பரப்புதல் கொரோனா நுண்நச்சுக்கு எதிரான போரில் மிகப்பெரிய அளவில் சிறப்பாகச் செயல்படத் துணை புரியும். யோகா கலையை யாரெல்லாம் பயிற்சி செய்து வருகிறார்களோ அவர்கள் கொரோனா நுண்நச்சால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகக்குறைவாகும். லடாக்கின் உயரமான லே பனிமலையில் நேற்று யோகா பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா நுண்நச்சு காரணமாகவும், சமூக விலகல் தொடர்பாகவும் அது இரத்து செய்யப்பட்டது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே யோகா பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் யோகா செய்தால், 20 பேருக்கு மேல் கூடி யோகா செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம். யோகாக் கலையைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நுரையீரல், சுவாசக் குழாய் வலுவடையும். குறிப்பாக நுரையீரலைப் பாதிக்கும் கொரோனா நுண்நச்சை எதிர்க்க யோகா மிகவும் பயன்படும்” என்று நடுவண் ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் தெரிவித்தார். அது எல்லாம் சரி- யோகா என்றால் என்ன! என்று கேட்கிறார்கள் அறிவார்ந்த மக்கள். நண்பர்களிடமும், சுற்றுவட்டாரத்திலும், பாஜகவினரிடமும், இணையத்திலும் தேடிப் பார்த்த நிலையில்:
1.யோகாசனம் தான் யோகாவா?
2.மோடி செய்கிற தியானப்பயிற்சி யோகாவா?
3.உடற்பயிற்சி எல்லாமே யோகாவா?
4.மூச்சுப்பயிற்சி யோகாவா?
5.வோதாத்திரி கொடுத்துவிட்டுச் சென்ற பயிற்சிகள் யோகாவா?
6.வாழும் கலை ரவி சங்கர் தருகிற பயிற்சிகள் யோகாவா?
7.சக்கி வாசுதேவ் குதித்து கொண்டாடுவது யோகாவா?
8.பாபா ராம் தேவ் செய்து காட்டுவது யோகாவா?
9.பல்வேறு தனித்தமிழ் அமைப்புகள் ஓகம் என்று தருகிற பயிற்சிகள் யோகாவா?
கிடைத்த விடைகளில், இத்தனைக் கேள்விகள் எழுந்திருக்கின்றன. எதைக் முன்னெடுத்து- கொரோனாவிற்கு எதிராக களமிறங்குவது அமைச்சர் பெருமான் ஸ்ரீபாட் நாயக் அவர்களே! என்று கேட்கின்றனர் அறிவார்ந்த மக்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



