Show all

உச்சஅறங்கூற்று மன்றத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் மனு பதிகை! குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆபத்தை புரிந்து கொள்ளாத பாஜக

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட 82 நாட்களில், அதுதொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் 75  பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் வெடித்த வன்முறைகளில் அசாமில் 6 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 19 பேரும், கர்நாடகத்தில் 2 பேரும், டெல்லி கலவரங்களில் 48  பேரும் கொல்லப்பட்டுள்ளனர். நடுவண் பாஜக அரசு புரிந்து கொள்ள மறுக்கும் இந்த ஆபத்தையொட்டி, ஐநா மனித உரிமைகள் ஆணையம் உச்சஅறங்கூற்று மன்றத்தில் மனு.

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடுவண் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது முதல்- இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி நாட்டை வன்முறைக்களத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்தச் சட்டத்துக்கு எதிராக முதலில் வடகிழக்கு மாநிலங்களில் வெடித்த போராட்டம், பின்னர் மேற்கு வங்காளம், டெல்லி, தமிழ்நாடு என பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக பெரும் வன்முறை  நடந்து வந்தது. தற்போது தான் படிப்படியாக அமைதி நிலைக்கு திரும்பி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 19-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட 82 நாட்களில், அதுதொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் 75  பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் வெடித்த வன்முறைகளில் அசாமில் 6 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 19 பேரும், கர்நாடகத்தில் 2 பேரும், டெல்லி கலவரங்களில் 48  பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு ஆதரவு என்கிற போர்வையில் ஒரு குழுவினர் பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளதுதான் இந்தியாவில் இதுவரை முன்னெடுத்திராத புதிய போராட்ட முறையாகும். அவர்கள் கலவரம், வன்முறை, காவல்துறையினர் முன்னிலையிலேயே துப்பாக்கிச்சூடு என அனைத்திற்கும் தயார் படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, குடியுரிமை சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்னும் அறிவிக்கை செய்யவில்லை. விதிகள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சக வட்டாரங்கள், எப்போது அறிவிக்கை செய்யப்படும் என்பதற்கான காலக்கெடு எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக  ஐநா மனித உரிமைகள் ஆணையம் உச்சஅறங்கூற்று மன்றத்தில் மனு ஒன்றை பதிகை செய்து உள்ளது. அதில் அறங்கூற்றுமன்றத்திற்கு உதவுவதற்காக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.