Show all

அறங்கூற்றுமன்றம் கவலை! தமிழைச் செம்மொழி என்று அறிவித்து விட்டால் போதுமா? அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல்

தமிழைச் செம்மொழி என்று அறிவித்து விட்டால் போதுமா? அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு ஏன் முயலவில்லை? என அறங்கூற்றுமன்றம் கேள்வியையும், கவலையையும் எழுப்பியுள்ளது.

27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முயற்சி இல்லாமல், செம்மொழி எனக் கூறுவதால் என்ன பயன்? என, சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 

ஒன்றிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், 50 ரூபாய், 200 ரூபாய் கட்டணத்தில், பிற மொழியினருக்கு, ஹிந்தி சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புகளை நடத்துகிறதே?

அதுபோல, தமிழர் அல்லாதவர்களுக்கும், தமிழ் தெரியாத வெளிநாட்டு தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க, குறைந்த கட்டணத்தில் அஞ்சல் வழிக் கல்வியை தொடங்க உத்தரவிடக் கோரி, பாரதி சிந்தனை மன்ற செயலர் லட்சுமி நாராயணன் என்பவர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமல், செம்மொழி எனக் கூறிக் கொள்வதால் என்ன பயன்? தொன்மையான மொழி தமிழ். 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை பாண்டிய மன்னர்கள், மூன்று சங்கங்களை அமைத்து, தமிழை வளர்த்தனர். பழமையான தமிழ் கையெழுத்து பிரதிகள், ‘யுனெஸ்கோ’ அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாமல், அந்தமான் நிகோபர் தீவுகள், இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும், தமிழ் அலுவல் மொழியாக உள்ளது. அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ், இந்தோனேஷியா, பிஜி, தென் ஆப்ரிக்கா, மியான்மர் போன்ற நாடுகளிலும் தமிழ் மொழி பரவியுள்ளது. இந்நாடுகளில் உள்ள தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில், தமிழ் மொழியை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவில்லை.

இலத்தீன் மொழியில் தமிழ் மொழியைப் பற்றி, அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹர்ட், கலிபோர்னியா பல்கலை தமிழ் பேராசிரியர் பெர்கெலே, செக்கஸ்லோவியா பேராசிரியர் கமில் வக்லாவ், திருக்குறளை லத்தின் மொழியில் மொழி பெயர்த்த வீரமாமுனிவர் உள்ளிட்டோர், தமிழின் தொன்மையையும், பெருமைகளையும் எடுத்துஉரைத்துள்ளனர்.

இந்தியாவில் செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ். எனவே, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் அளித்த கருத்துருவின் மீது நடவடிக்கை எடுத்து, அஞ்சல் வழி தமிழ் வகுப்புகளை நடத்த, 37.36 லட்சம் ரூபாயை விடுவிக்க வேண்டும். அதன்பின், குறைந்த கட்டணத்தில் அஞ்சல் வழி வகுப்புகளை தொடங்க வேண்டும். இவ்வாறு, இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் இராமசுப்பிரமணியன், அறங்கூற்றுவர் கிருபாகரன் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

லட்சுமி நாராயணன் பதிகை செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தை தாண்டி வெளிமாநிலங்களுக்கு தெரியவில்லை. எனவே, தமிழர் அல்லாதவர்களுக்கு தமிழ் மொழியை அஞ்சல் வழியில் கற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் வளர்ச்சித் துறை செயலருக்கும் இயக்குனருக்கும் மனு அளித்தேன்.

இது சம்பந்தமாக கருத்துருக்களை உருவாக்கக் கோரி தமிழ் வளர்ச்சித் துறை துணை செயலர், தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழகத்திற்கு கடிதம் அனுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழ் பல்கலைக் கழகம், ‘அஞ்சல் வழியில் தமிழ் மொழியை பயிற்றுவிக்க 37.36 லட்சம் ரூபாய் செலவாகும்’ என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. திட்டத்தை அமல்படுத்த, இந்த நிதியை ஒதுக்கக் கோரி தமிழ் வளர்ச்சித் துறை துணை செயலருக்கு மீண்டும் மனு அனுப்பினேன். இதுகுறித்து பரிசீலிப்பதாக தமிழக அரசு பதிலளித்தது. அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அறங்கூற்றுவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளதாவது: அரியானாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் மொழி இரண்டாவது மொழியாக இருந்தது நம்மில் பலருக்கு தெரியாது. ஹிந்தி பேசும் மாநிலங்கள் பலவற்றில் தமிழ் இரண்டாவது மொழியாக தேர்வு செய்யப்படுகிறது. பல நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது.

தமிழ் தெரியாதவர்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை.

தமிழ் மொழி கற்பதை ஊக்குவிக்க பல திட்டங்களை வகுக்க வேண்டும். ஊக்கத் தொகைகளை வழங்க வேண்டும். தமிழர் அல்லாதவர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்பிக்க, தமிழ் ஆராய்ச்சிக்கு, மேம்பாட்டுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும், தமிழர்களும் பங்களிப்பை வழங்க வேண்டும்
தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக்கு புத்தகங்கள் வாங்க ஊக்கத் தொகை வழங்கி மொழியை மேம்படுத்த, தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளுக்கும்; பிற மொழி இலக்கியங்களைத் தமிழ் மொழிக்கும் மொழி பெயர்க்க, மாநில அரசு நிதி ஒதுக்க முன் வரவேண்டும். தமிழ் ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகளுக்கு அங்கீகாரம் வழங்கி, மொழியின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலம் தமிழ் மொழி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு அறங்கூற்றுவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.