Show all

தேர்தல் ஆணையத்தின் விடை! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகாருக்கு

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முழு பொறுப்பையும் ஏற்றுள்ள தேர்தல் ஆணையம் பொறுப்புடன் செயல்படவில்லை என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகாருக்கு தேர்தல் ஆணையத்தின் விடையளிப்பு.

27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நந்திகிராமில் கருத்துப்பரப்புதல் செய்தபோது, காலில் பலத்த காயமடைந்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திட்டமிட்டு அவர் தாக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

நந்திகிராமில் உள்ள கோவிலில் வழிபட்ட மம்தா பானர்ஜி, தன் தேரை நோக்கி சென்றார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் மம்தா பானர்ஜியை வேண்டுமென்றே தள்ளிவிட்டதாகவும், இதில் அவரது காலில் காயமடைந்ததாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். மேலும், இந்த அடாவடி நடக்கும்போது காவல்துறையினர் யாரும் தனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் அளித்த புகார் மனுவில், தேர்தல் நடக்கும் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முழு பொறுப்பையும் ஏற்றுள்ள தேர்தல் ஆணையம் பொறுப்புடன் செயல்படவில்லை என்றும், மாநில அரசை ஆலோசிக்காமல் காவல்துறை தலைவரை தேர்தல் ஆணையம் நீக்கிய 24 மணி நேரத்தில் தாக்குதல் நடந்திருப்பதாகவும் கூறி உள்ளது. ஒன்றியத்தில் ஆளும் பாஜக கேட்டுக்கொண்டதன் பேரில், அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நீக்குவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையமோ- தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்துகிறோம் என்ற பெயரில், மாநிலத்தில் சட்டம் -ஒழுங்கு இயந்திரங்களை கையகப்படுத்தியதாக கூறுவது முற்றிலும் தவறானது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் உத்தரவின் பேரில், இவை அனைத்தும் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது கூட வெறுக்கத்தக்கதாக தோன்றுகிறது. 

இந்த குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலமைப்பின் அடித்தளத்தை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது. மேற்கு வங்கம் உட்பட எந்தவொரு மாநிலத்தின் ஆட்சியையும் அன்றாட நிர்வாகத்தையும் தேர்தல் ஆணையம் கைப்பற்றவில்லை. 

திரிணாமுல் காங்கிரசின் புகார், முழுக்க முழுக்க மறைமுகமான குற்றச்சாட்டுகள். தேர்தல் ஆணையத்தின் உருவாக்கம் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு கூறி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.