18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகளும் இந்தப் புவிப்பந்தில் இருக்கின்றன. வடக்கு பசிபிக் கடற்பகுதியில் இருபதாயிரத்திற்கு கொஞ்சம் கூடுதலான பலாவ் மொழிபேசும் மக்களைக் கொண்ட சின்னஞ்சிறு நாடு பலாவ் தீவுகள் குடியரசு. இந்த நாட்டில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நாட்டின் நாணயம் அமெரிக்க டாலர் ஆகும். தென்னை மரங்கள் நிறைந்த அழகான நாடு. தேங்காய், மரவள்ளிக் கிழங்கு, கீரை வகைகள், கடல்வகை உணவுகள் இவர்களது உணவுப் பழக்கத்தில் உள்ளது. இந்த நாட்டில் முத்துக்குளிப்பு வருவாய் தரும் தொழிலாக உள்ளது. இதேபோல் சுமார் 1 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட குட்டிநாடான டோங்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கவில்லை. டோங்கா மொழி பேசும் இந்த நாட்டினர், தங்களது இறைமையை எந்த ஒரு வெளிநாட்டு சக்திக்கும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நாட்டில் முழுமையான அரசியல்சட்ட முடியாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலமன் தீவுகள், மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும் கொரோனா தாக்காத நாடுகளாகும். இவைதவிர அண்டார்டிகா கண்டமும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



