புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டமாகப் பேருந்துகளிலும், நடந்தும் செல்வதைத் தடுக்க என்ன நடவடிக்கையை நடுவண் அரசு எடுத்துள்ளது என்பது குறித்து வழக்கறிஞர்கள் அலோக் ஸ்ரீவஸ்தவா, ராஷ்மி பான்சால் ஆகியோர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கிற்கு பதில் கேட்டு, நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை. 18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பரவுவதைத் தடுப்பதில் முதன்மையானது நோய் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகியிருத்தல் என்பதாகும். நோய் பாதித்தவர்கள் யார்யார் என அறிவது கையை மீறிப் போய்விட்ட நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், சுய தனிமை, சமூக விலகலை வலியுறுத்தும் விதமாக 21 நாட்கள் வீடடங்கு உத்தரவைப் பிறப்பித்து, அதை நடுவண் அரசு கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நாட்களில் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அன்றாடம் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தும் கூலித் தொழிலாளர்களும் முடங்கியுள்ளனர். அவர்களுக்காக மாநில அரசுகள் சில பல நிதித் தொகுப்புகளை அறிவித்து வருகின்றன. ஆனால், பிகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அடுத்த 21 நாட்களுக்கு வேலையில்லை என்பதால், தங்களின் சொந்த ஊருக்குக் கூட்டம் கூட்டமாக நடந்து செல்கின்றனர். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கே சமூக விலக்கல் என்கிற அடிப்படையில் இந்த வீடடங்கு. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வது கொரோனா நுண்ணுயிரியை வரவேற்பதாகும். இவர்களை அந்தந்த மாநிலங்களுக்குள்ளே தடுத்து 14 நாட்கள் தனிமையில் வைக்க நடுவண் அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்தச் சூழலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டமாகப் பேருந்துகளிலும், நடந்தும் செல்வதைத் தடுக்க என்ன நடவடிக்கையை நடுவண் அரசு எடுத்துள்ளது என்பது குறித்து வழக்கறிஞர்கள் அலோக் ஸ்ரீவஸ்தவா, ராஷ்மி பான்சால் ஆகியோர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பொது நல மனுக்களைத் பதிகை செய்திருந்தனர். இந்த மனு உச்ச அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே, அறங்கூற்றுவர் எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் முன்னிலையில் காணொளி மூலம் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், ‘கொரோனா நுண்ணுயிரியைக் காட்டிலும் அதனால் தொழிலாளர்கள் இடம் பெயர்வதால் ஏற்படும் பதற்றமும், அச்சமும் பெரிதாக இருக்கிறது. இது தொடர்பாக அறங்கூற்று மன்றம் குழப்பம் ஏற்படுத்தாது. ஏனென்றால், தொழிலாளர்களைத் தடுக்க நடுவண் அரசு ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உங்கள் மனுக்களை நாங்கள் பரிசீலிக்கிறோம். இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் நாங்கள் பிறப்பிக்கவில்லை. நடுவண் அரசு சார்பில் இதற்கு அறிக்கை அளிக்கட்டும் எனத் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பில் நடுவண் அரசு நாளைக்குள் அறிக்கையை பதிகை செய்யக்கோரி கவனஅறிக்கை அனுப்ப உத்தரவிடுகிறேன். நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



