உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள தலைமைஅமைச்சர் கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளார். 30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள தலைமைஅமைச்சர் கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளார். மேலும் இராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல என்றும் நேபாள நாட்டில் பிறந்தவர் என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள தலைமைஅமைச்சர் தெரிவித்துள்ளார். அயோத்தி என்பது நேபாளத்தில் பிர்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம். அங்குதான் இராமர் பிறந்தார் என அவர் கூறி உள்ளார். நேபாள கவிஞர் பனுபக்தாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள அவர் இவ்வாறாகப் பேசினார். பனுபக்தா நேபாளத்தில் கொண்டாடப்படும் கவிஞர். மேற்கு நேபாளத்தில் உள்ள தனு பகுதியில் 206 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இவர், வால்மீகியின் இராமாயணத்தை நேபாள மொழியில் மொழிபெயர்த்தார். அவர் 54 ஆண்டுகள் வாழ்ந்து நேபாள இலக்கிய உலகிற்கும், ஹிந்து மதத்திற்கும் தொண்டு செய்து காலமானார் என்று தெரிவிக்கப்படுகிறது. நேபாள கவிஞர் பனுபக்தாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நேபாள தலைமைஅமைச்சர் கே.பிசர்மா ஒலி, ‘இராமர் பிறந்த உண்மையான அயோத்தி எங்கள் நாட்டில்தான் உள்ளது. இந்தியாவில் உள்ள அயோத்தியாவில் வேண்டுமானால் சர்ச்சை இருக்கலாம். நம் அயோத்தியாவில் இல்லை’ என அவர் கூறி உள்ளார். கடந்த சில மாதங்களாக இந்தியா நேபாள உறவு சுமுகமாக இல்லை. எல்லை சார்ந்த சிக்கல் இரு நாடுகள் இடையே நிலவுகிறது. சுகாலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் லிம்பியாதுரா பகுதியில்தான் மகாகாளி ஆற்றின் உற்பத்தி பகுதி இருப்பதாக நேபாள அரசு கூறி வருகிறது. ஆனால் அதனை ஏற்க மறுக்கும் இந்தியா, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளுக்குக் கிழக்கேதான் அந்த ஆறு உருவாவதாகக் கூறுகிறது. இந்நிலையில்தான் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த திட்டத்திற்கு நேபாளம் நாடாளுமன்றம் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கு இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது. நேபாள தலைமைஅமைச்சர் முன்னெடுத்துவரும் இந்தியாவுடனான எல்லைச் சிக்கலுக்கு நேபாள மண்ணிலேயே போதிய ஆதரவு இல்லை என்பது உண்மை நிலவரம் ஆகும். இதனால் நேபாளத்தில் வசிக்கிறவர்களில் 80 விழுக்காட்டினர் ஹிந்துக்கள் என்ற காரணத்தினால், இந்தியாவில் பாஜக பாணியில் நேபாளத்தில் தலைமைஅமைச்சர் சர்மாஒலி நேபாள மக்களைக் கவரும் வகைக்கு இராமரைக் கையில் எடுத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. உலகத்தின் ஒரே ஹிந்து மத நாடாக இருந்ததுதான் நேபாளம். ஹிந்து மதத்தின் பெயரால் மன்னர்கள் செய்த கொடுமைகள் தாங்காமல் ஏற்பட்ட புரட்சியில்தான் அங்கே மக்களாட்சி மலர்ந்தது. பாராளுமன்றம் அரசரின் இராணுவம் மீதான அதிகாரங்களை அகற்றி மன்னர் ஹிந்து கடவுளின் வாரிசு என்ற பட்டத்தையும் நீக்கியது. மேலும் மன்னர் வரி செலுத்தவேண்டும் எனவும் கேட்கப்பட்டது. பல அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. “மேதகு மன்னரின் அரசு" என்ற பெயர் நீக்கப்பட்டு நேபாள ஜனநாயக அரசு என அரசின் பெயர் மாற்றப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் நேபாளம் மதசார்பற்ற, மக்களாட்சி நாடாக அறிவிக்கப்பட்டது. இதுவெல்லாம் நடை பெற்றது பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு. ஹிந்துத்துவா அரசு ஒருநாட்டில் தோற்றுப் போனது என்பதற்கு நேபாளம் சான்றாகும். தெற்கே வெப்பமான தெராய்யும் வடக்கே குளிரான இமாலயம் கொண்ட நேபாளத்தின் புவியமைப்பு பெரிய வேறுபாடுகளை காட்டுகிறது. சிறிய தூரத்துக்குள் சமவெளியில் இருந்து உலகிலேயே மிக உயரமான இமயம் வரை நிலம் மிக விரைவாக உயர்வடைகிறது. சினாவுடனான எல்லையில் உள்ள எவரெஸ்ட் உட்பட, உலகில் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபளத்தில் காணப்படுகிறது. நேபாளத்தின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாக காட்மாண்டூ விளங்குகிறது. நேபாளத்தின் பெயரின் தொடக்கம் குறித்த தெளிவான கருத்துக்கள் இல்லாத போதும் நே (புனித) பாள் (குகை) என்பது பொதுவான கருத்தாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



