மார்ச், மே, ஜூலை என மூன்றாவது முறையாகவும் கணக்கெடுக்க வராத மின்சார வாரிய அடாவடியால், கொரோனா அச்சத்தை விட மின்கட்டண அச்சம் சென்னை மக்களை அச்சுறுத்தி வருகிறது. 30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை முழுவதும் மார்ச், மே, ஜூலை என மூன்றாவது முறையாகவும் கணக்கெடுக்க வராத மின்சார வாரிய அடாவடியால் பொதுமக்கள் அவர்களாகவே மின் அளவை குறித்துக் கொண்டு, கட்டணம் செலுத்த பணத்துடன் மின்வாரிய அலுவலகங்களுக்கு பாதுகாப்பும் இல்லாமல் கொரோன சமூக இடைவெளியும் பின்பற்ற வாய்ப்பு இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள். மின்சார வாரிய ஆட்கள் மூன்றாவது முறையாகவும் கணக்கெடுப்பு செய்யாத நிலையில் இயங்கலை மூலமாகவும் யாரும் பணம் செலுத்தவும் இயலாது. மின் கட்டணத்தை- அந்தந்த இருமாதக் கணக்கெடுப்பை எடுக்காமல் விட்டுவிட்டு, நான்கு மாத, ஆறுமாத கணக்கெடுப்பில் கட்டினால் மின்கட்டணம் ஒன்று, இரண்டு, மூன்று என்ற மடங்கில் உயராமல்- இரண்டு நான்கு எட்டு மடங்காக விரிவடையும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கணக்கெடுப்பு முறை அவ்வாறன கட்டமைப்பு உடையதாகும். இதனால் மின் கட்டணத்தை தாமாதிக்க தமிழகத்தில் யாரும் விரும்ப மாட்டார்கள். இதனால், மின் கட்டணம் செலுத்துவதற்காக, அன்றாடம், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மின் பயனீட்டாளர்கள் வந்து செல்கின்றனர். மின் கட்டண வசூலிப்பு மையத்தில், கூட்டம் அலைமோதுவதால், சமூக இடைவெளியை பின்பற்ற முயலாமல், இன்றைக்குள் கட்டி விட்டு சென்று விட வேண்டுமே என்கிற கொரோனா அச்சத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மின் பயனீட்டாளர்களால், தொற்று பரவும் அபாயம் உள்ளது. மின்சார வாரியம் உடனடியாக, உரிய பாதுகாப்புடன், கணக்கெடுக்க ஆட்களை அனுப்பி, இந்தச் சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்பதே மக்கள் விருப்பமாக இருக்கிறது. மின் கணக்கீட்டை எடுத்து இயங்கலையில் கட்டணம் செலுத்திட வாய்ப்பை உருவாக்கினால் மின் கட்டண வசூலிப்பு மையத்தில், எண்பது விழுக்காடு கூட்டம் குறைந்து விடும். மெத்தன போக்கை கைவிட்டு மக்களுக்கு உதவுமா மின்சார வாரியம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



