மீட்டெடுப்பு என அழைக்கப்படும் இங்கிலாந்து தலைமையிலான மருத்துவக் குழு நடத்திய பரிசோதனையில் ‘ஒரு பெரிய முன்னேற்றம்’ என்று விவரிக்கப்பட்டுள்ள டெக்சாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து, கொரோனா சிகிச்சைக்கானதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தரமான ஒரு மருந்தாக இது அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சு தொற்றுப் பரவலால் உலகம் முழுவதும் 81 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,40,390 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் இந்த நுண்நச்சு தொற்றிலிருந்து விடுபட பற்பல மருந்துகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனாலும் கொரோன நுண்நச்சு தொற்றிலிருந்து விடுபட கைகண்ட மருந்து என்பதாக ஒரு மருந்தும் காண முடியாமல் மருத்துவ வல்லுநர்கள் திணறிவருகின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் டெக்சாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் குணப்படுத்துகிறது என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். இது மலிவாகவும் கிடைக்கும் எனவும் கூறி உள்ளனர். கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவான ஸ்டீராய்டு மருந்து டெக்சாமெதாசோனின் குறைந்த அளவுகளை வழங்குவது, மிகக் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதங்களை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துள்ளதாக சோதனை முடிவுகள் தெரிவித்து உள்ளன. மீட்டெடுப்பு என அழைக்கப்படும் இங்கிலாந்து தலைமையிலான மருத்துவ பரிசோதனை குழு இந்தச் சோதனையை நடத்தி உள்ளது. ‘ஒரு பெரிய முன்னேற்றம்’ என்று விவரிக்கப்பட்டுள்ள இந்த முடிவுகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இந்த மருந்து உடனடியாக தரமான ஒரு மருந்தாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சோதனை குறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் லாண்ட்ரே கூறியதாவது:- கொரோனா பாதிக்கப்பட்டு மூச்சுக்கருவி சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு டெக்சாமெதாசோன் வழங்கப்பட்டால், அது உயிர்களைக் காப்பாற்றும், மேலும் இதற்கு மிகக் குறைந்த செலவே ஆகும். இதுவரை கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்ட மருந்து இது ஒன்றே. இது பெரிய அளவில் இறப்பைக் குறைக்கிறது. இது பெரிய முன்னேற்றம் என்று இந்த தெரிவித்துள்ளார். இது ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவதாக கூறப்படுகிறது. இது கொரோனா போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனை என தலைமைஅமைச்சர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அரசு இயல்அறிவு ஆலோசகர் சர் பேட்ரிக் வல்லான்ஸ் கூறுகையில், இது மிகப் பெரிய அற்புதமான முன்னேற்றம், நமது இயல்அறிவர்கள் (சயின்ஸ்டிஸ்ட்) நல்லதொரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்துள்ளனர். இம்மருந்து தொடக்கத்திலேயே பயன்படுத்தப்பட்டிருந்தால் பிரித்தானியாவில் 5000 நோயாளிகள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள். இது விலை குறைந்த மருந்து. தயாரிப்பிலும் சிக்கல் இல்லாதது என அவர் கூறியுள்ளார். இது குறித்து தேசிய நலங்குச்சேவையின் ஸ்டீபன் பவிஸ் கூறுகையில் இது நல்ல மாற்றம், கொரோனா நோயாளிகளை பிரித்தானியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் காப்பாற்ற முடியும். மூச்;சுக்கருவி மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாக உள்ளது. பல ஆண்டுகளாகும் என்றும் இருந்த நிலையில் மிக விரைவாக நல்ல தீர்வு கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார். 2 லட்சம் நோயாளிகளுக்கு தேவையான மருந்து இருப்பில் உள்ளது இது எதிர்கால தேவைக்கும் போதும் என கருதப்படுகிறது. டெக்ஸசாமெதோசான் எனப்படும் மருந்து சாதாரணமாக மூட்டுவலிக்கும், ஒவ்வாமைக்கும் பயன்படக் கூடியது. அதுவும் மிகக்குறைந்த செலவில் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதால் இதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



