Show all

கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன! இரசியாவில்

தற்போது  கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை இரசியா அறிவித்துள்ளது. 

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அனைத்துலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைஅடுத்து 3 வது இடத்தில் இரசியா உள்ளது. அங்கு தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது. தற்போது  கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை இரசியா அறிவித்துள்ளது. 

அவிபாவிர்  (Avifavir) என்ற இந்த மருந்து நாட்டின் பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் என இரசிய அரசு இன்று தெரிவித்துள்ளது. இரசிய அரசின் 50 விழுக்காடு முதலீடு உள்ள கெம்ரார் என்ற நிறுவனம் இந்த புதிய மருந்தை தயாரித்து உள்ளது.

நாட்டில் நுண்ணுயிரித் தொற்று அதிகரிப்பதால், மிகவும் குறைந்த சமயத்தில்,  சோதனைகள் நடந்து வரும் நிலையிலேயே இந்த மருந்துக்கு இரசியா நலங்கு அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இரசிய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் கெம்ரார் குழுமம் ஆகியவை இணைந்து கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான முதல் தொகுதி அவிபாவிர் மருந்தை இரசிய மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளதாக இரசிய நேரடி முதலீட்டு நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாதந்தோறும் 60000 பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இரசிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

இரசியா முழுவதும் இந்த மருந்துக்கு அதிக தேவை உள்ளது, நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் வழங்கல் ஏற்பாடு செய்வதற்கான கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. மருத்துவப் பரிசோதனைகளின் தொடக்க முடிவுகள் இந்த மருந்தை உலகில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒன்றாக ஆக்குகின்றன, என இரசிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறி உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.