Show all

இந்திய விமானியை நாளை விடுவிப்போம்! நிபந்தனையின்றி நல்லெண்ண அடிப்படையில்: தலைமைஅமைச்சர் இம்ரான்கான் அறிவிப்பு

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவு பெற வழிவகுக்கும் என்றால், இந்திய விமானியை விடுவிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை மேலும் பெரிதுப்படுத்த விரும்பவில்லை என்றும் இது தொடர்பாக இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு, தொலைபேசி வாயிலாக நேற்று பேச முயற்சி செய்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நாங்கள் பயந்துவிட்டோம் என்று எண்ணிவிடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி இந்திய விமானியை நாளை விடுவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, நேற்று காலை இந்திய எல்லைக்குள் நுழைய போக்கு காட்டிய பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை துரத்திச் சென்ற  போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,077.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.