Show all

விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டும் இம்ரான்கான்! தீவிரவாதம் குறித்து இந்தியாவுக்கு அறிவுறுத்தும் செய்தி என்ன

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யாரும் மதத்தை காரணமாக வைத்து தற்கொலை படை தாக்குதல்களை நடத்துவதில்லை. அப்படிப் பார்த்தால் ஹிந்துக்களான விடுதலை புலிகள்தான் அதிக அளவில் தற்கொலை படைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

காஷ்மீரில் நடுவண் ஆயுதக் காவல்படை வீரர்கள் 40 பேரை கொடூரமாகக் கொன்றது தீவிரவாத அமைப்பான ஜெய்சு இ முகம்மது அமைப்பு.

இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் மீது மேற்கொண்ட நடவடிக்கையில், இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தானுக்குள் போய் சிக்கிக் கொண்டார். அவரை பாகிஸ்தான் படையினர் சிறை பிடித்தனர். 

இந்த நிலையில் அபிநந்தன் அவர்களை, நிபந்தனையின்றி நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான் கான் இன்று அறிவித்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசினார். அப்போது அவர் விடுதலைப் புலிகள் அமைப்பையும் தனது பேச்சின்போது குறிப்பிட்டார். அவர் சொன்னதாவது:

தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை படை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பாக உலக அளவில் அதிக அளவில் தற்கொலை படை தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகள்தான். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே ஹிந்துக்கள். ஆனால் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர். என்று கூறினார் இம்ரான் கான்.

இதில் உள்ளீடாக இம்ரான் கான் இந்தியாவிற்கு ஏதோ சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்வார்களா இந்தியா ஆட்சியாளர்கள். அல்லது ஏதிரியின் ஆலோசனை நமக்கு எதிரானதாகவே அமையும் என்று கண்மூடித்தனமாக புறக்கணிப்பார்களா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,077.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.