Show all

ஒன்னரை லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாற்றுச் சோகம்! 10வது ஆண்டாக உலகத் தமிழர்கள் நினைவேந்தல்

உலகம் முழுவதும் எட்டு கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்தியாவும் ஈழமும் தமிழர்களின் தாய் மண்ணாகும். ஆனாலும் உரிமைக்காக போராடிய ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க, உலக நாடுகளின் பொருளாதாரம், ஆயுத உதவிகள், புலனாய்வு உதவிகள் ஆகியவைகளை இலங்கை அரசு, தடையின்றி பெற்று, போராளிகளோடு சேர்த்து ஒன்னரை லட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த வரலாற்றுச் சோகம் நடந்து முடிந்தது. பத்தாவது ஆண்டாக  உலகத் தமிழர்களால் இன்று நினைவேந்தல் கடைபிடிக்கப் படுகிறது.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழீழ தனிநாடு கோரி முப்பத்து மூன்றுஆண்டுகள் போராடிய விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையேயான போர் 04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5111 திங்கட் கிழமையோடு (18.05.2009) ஒன்னரை லட்சம் ஈழத்தமிழர்களின் பிணத்தின் மீது முடித்து வைக்கப் பட்டது. 

ஏறத்தாழ விடுதலைப் புலிகளின் கைகளில் முற்றாக வந்து, விடுதலைப் புலிகளின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது தமிழீழம்! உலக நாடுகளின் பொருளாதாரம், ஆயுத உதவிகள், புலனாய்வு உதவிகளோடு இலங்கை இராணுவத்தால், பத்தாண்டுகளுக்கு முன்பு இன்றைய நாளில் போரில் ஒன்னரை இலட்சம் ஈழத்தமிழர்கள் கொல்லப் பட்டு தமிழீழப் பகுதிகள் சிங்களப் பேரினவாதிகளால் மீண்டும் ஆக்கிரமிக்கப் பட்டது.

தமிழினத்தின் மிகப் பெரும் துயரான ஈழத் தமிழர் இனப்படுகொலையில் 10-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகத் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தியா, இலங்கை, மலேசியா, ஐக்கிய இராச்சியம், தென்னாப்பிக்கா, கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்சு, ரீயூனியன், பிஜி, மொரிசியசு, செருமனி, சுவட்சர்லாந்து, ஆத்திரேலியா, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, தாய்லாந்து, ஐக்கிய அமீரகம், பகமாஸ், டென்மார்க், சீனா, கட்டார், சிசெல்ஸ், நியூசிலாந்து, வியடநாம், சுவீடன், கம்போடியா ஆகிய தமிழர்கள் வாழும் நாடுகளில் இந்நிகழ்வுகளுக்கு சிறதும் பெரியதுமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழர்கள் மக்கள் தளத்தில், தங்களின் முழு விடியலுக்கான விழிப்புணர்வோடுதான் இருக்கிறார்கள். முன்னெடுக்கும் தலைவர்களைத்தான் உலகம் முழுவதுமே யாரையும் காணோம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,156. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.