கடந்த 20 நாட்களாக நீடித்து வந்த மர்மம் அனைத்தையும் உடைத்து நேற்று பொது நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். வடகொரிய அதிபர் கிம் ஜாங், உரம் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தபோது, அனைவரும் கைகளைத்தட்டி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ததாகவும், அவருடன் அவரின் சகோதரி கிம் யோ ஜாங் உடன் இருந்தார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வட கொரியா அதிபர் கிம் ஜாங் கடந்த 20 நாட்களாக வெளிஉலகிற்கு தனது முகம் காட்டாமல் இருந்து வந்தார். வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில்கூட அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. இந்தச் சூழலில் அண்மையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் தொலைக்காட்சிமடை செய்தி வெளியிட்டது. வடகொரியாவைப் பொறுத்தவரை தீவிரமான கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாடு. அங்கு அரசின் தணிக்கைக்குப் பின்புதான் ஊடகங்களின் செய்திகூட வெளியாகும். அதிபர் கிம் உடல்நிலை குறித்த எந்தத் தகவலும் வெளிஉலகிற்கு தெரியாமல் கமுக்கமாகவே வைக்கப்பட்டதால் அவர் உயிருடன் இருக்கிறார என்ற சந்தேகம் கூட வலுத்தது. ஏனென்றால் கிம் தாத்தா முதலாம் கிம் இறந்தபோது 2 நாட்களுக்குப் பின்புதான் வெளிஉலகிற்கே தெரியவந்தது இந்தச் சூழலில் அடுத்த அதிபராக கிம் சகோதரி கிம் யோ ஜாங் வருவார் அதற்கான ஏற்பாடுகள் தயாராகின்றன என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இவ்வாறன அனைத்து மர்மமுடிச்சுகளையும் துண்டிக்கும் முகமாக- தலைநகர் யாங்யாங் அருகே சன்சியான் நகரில் அரசு சார்பில் கட்டப்பட்ட உரம் தயாரிக்கும் தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி அதிபர் கிம் ஜாங் உன் நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான புகைப்படங்களை வடகொரிய அரசின் கொரிய நடுவண் செய்தி நிறுவனம்(கேசிஎன்ஏ) வெளியிட்டுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் ரிப்பனை வெட்டியவுடன் அருகில் அனைவரும் கைகளைத்தட்டி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ததாகவும், அவருடன் அவரின் சகோதரி கிம் யோ ஜாங் உடன் இருந்தார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



