கமலா ஹாரிசின் தமிழகத் தொடர்பினை நினைவூட்டும் வகையில் நம் தாய்மொழியாம் தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பி உள்ளதாகக் குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து. 23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய எச்சமும், தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவருமான, கமலா ஹாரிசுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்க நாட்டின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது கைப்படத் தமிழில் வாழ்த்துக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பதாலும், அவர் நமது தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி என்பதும், தமிழக மக்கள் அனைவருக்கும் பெருமிதம் கொள்ள வைக்கும் இனிய செய்தி என்றும், ஒரு தமிழ்ப் பெண், அமெரிக்காவையும் ஆளத் தகுதி படைத்தவர் என்பதை, உங்களது கடின உழைப்பு மெய்ப்பித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கமலா ஹாரிஸின் தமிழகத் தொடர்பினை நினைவூட்டும் வகையில் நம் தாய்மொழியாம் தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பி உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



