Show all

டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து!

டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்தில் செல்ல 15 லட்ச ரூபாய் கட்டணம். 195 நாடுகளை சேர்ந்தவர்கள் நீ, நான் என்று போட்டி போடுகின்றார்கள் முதல் பயணத்திற்கு

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: என்னதான் அதிவேக விமானங்கள் வந்து விட்டாலும், சாலை வழியாக பல்வேறு நாடுகளுக்கு சென்று, அவற்றின் அழகில் மகிழ்ந்திட விரும்பும் சுற்றுலா பயணிகள் இருக்கவே செய்கின்றனர். 

அப்படிப்பட்டவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக, தனியார் சுற்றுலா நிறுவனம் ஒன்று, இரண்டு மாதங்களுக்கு முன்பு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த சமயத்தில் இந்த அறிவிப்பு தலைப்பு செய்தியாக மாறியது. ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் என்ற நிறுவனம்தான் டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து சேவையை வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகள் வழியே சாலை வழியாகப் பயணம் செய்யலாம் என்பதால், பயண ஆர்வலர்கள் நடுவே இந்த அறிவிப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 195 நாடுகளைச் சேர்ந்த பயண ஆர்வலர்கள் பலர் இந்த பேருந்து சேவையில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்துள்ளதாக அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. 

தற்போது கொரோனா நுண்நச்சு வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் சரியாக இருந்தால், அடுத்த ஆறாவது மாதம் இந்தப் பேருந்தின் முதல் பயணம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணம் தொடங்கும் நாள் குறித்த அதிகாரப்பாடான அறிவிப்பை நடப்பாண்டு இறுதிக்குள் வெளியிடுவதற்கு அட்வென்ஜர் ஓவர்லேண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தப் பேருந்து சேவை டெல்லியில் இருந்து தொடங்கும். பின்னர் மியான்மர், தாய்லாந்து, சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, லாத்வியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வழியாக இங்கிலாந்து தலைநகர் லண்டனை சென்றடையும். 

ஒட்டுமொத்த பயணமும் நிறைவடைய 70 நாட்களுக்கு மேல் ஆகும். டெல்லி-லண்டன் பேருந்து சேவைக்கான வரவேற்பு வானளாவ இருந்தாலும், இருக்கைகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருக்கும். இந்தப் பயணத்திற்கான கட்டணம் 15 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், முன்பதிவு தொகை 3விழுக்காடு முதல் 5விழுக்காடு வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பல நாடுகள் வழியே செல்லக்கூடிய நெடுந்தொலைவு பயணம் என்பதால், இந்தப் பேருந்தில் பயணிகளின் சொகுசுக்கு உறுதி செய்வதற்காக பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றிருக்கும். டெல்லியில் இருந்து லண்டன் செல்லவுள்ள பயணத்தில், இந்த பேருந்து பயணிக்கும் அனைத்து நாடுகளின் அதிகாரிகளுடனும் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வருவதாகவும் அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பயண விரும்பிகளுக்கு இந்தப் பேருந்து பயணம் வாழ்நாளில் மறக்க முடியாத சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்பது உறுதி. ஏனெனில் சாலை வழியாகப் பல்வேறு நாடுகளை கடப்பது என்பது உண்மையிலேயே சிறப்பான முன்னெடுப்பு என்று கருதப்படுகின்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.