Show all

கனடா தூதரை அழைத்து எதிர்ப்பு பதிவு! உழவர்கள் போராட்டம் குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்தமைக்கு

இயங்கலை நிகழ்வு ஒன்றில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, உழவர்களின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும் என்று பேசியிருந்தார். மேலும், போராட்டச் சூழல் கவலையளிப்பதாக இருக்கிறது எனவும் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார்.

20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள கருப்பு வேளாண் சட்டங்கள் வேண்டாம் என்று மறுத்து, டெல்லி எல்லையில் பத்தாவது நாளாக உழவர்கள் போராட்டம்  நடத்திவருகின்றார்கள். 

கருப்பு வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி மூளைச்சலவை செய்யும் வகைக்காக, ஒன்றிய பாஜக அரசுத் தரப்பில் இரண்டுகட்ட கலந்துரையாடல்கள் முன்;னெடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்தநிலையில், மூன்றாம்கட்ட கலந்துரையாடலை நாளை நடத்தவிருப்பதாக தெரியவருகிறது.

உழவர்கள் போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், அது குறித்து கனடா தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு இந்திய ஒன்றிய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இயங்கலை நிகழ்வு ஒன்றில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, உழவர்களின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும் என்று பேசியிருந்தார். மேலும், போராட்டச் சூழல் கவலையளிப்பதாக இருக்கிறது எனவும் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு ‘இந்தியாவின் உள்நாட்டு முன்னெடுப்புகளில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து, ‘இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றும் வெளியுறவுத் துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து விளக்கம் கேட்டு கனட தூதருக்கும் கவனஅறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் இந்திய ஒன்றிய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘கனட தூதருக்கு வெளியுறவுத்துறை சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டு, அவரிடம் நேரில் இந்தப் பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கனடா தலைமைஅமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசிவரும் கருத்துகள் மூலம் இந்தியாவின் உள்நாட்டு முன்னெடுப்புகளில் தலையிடுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கனடா தூதரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர்கள் இதுபோல் தொடர்ந்து பேசிவந்தால், அது இருநாட்டு உறவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.