ஜியோ உடனான போட்டியில் ஏர்டெல் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வோடபோன் ஐடியா வர்த்தகம் சரிவு பாதையை நோக்கி செல்ல தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் காலத்தில் இந்திய தொலைத்தொடர்புச் சந்தையில் இருமுனை போட்டியாக மட்டுமே இருக்குமாம். 20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் ஜியோவின் மலிவான கட்டண சேவையின் மூலம் உடன் போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அதிகளவிலான வணிகச் சரிவையும், வாடிக்கையாளர்கள் இழப்பையும் எதிர்கொண்டு வந்தன. இதுமட்டும் அல்லாமல் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் வருமானத்தில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் இந்த வேளையில் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் இரு நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இந்தக் கடுமையான போட்டி நிறைந்த சூழ்நிலையில் சேவையின் தரம் முக்கிய விவாத பொருளாக மக்கள் நடுவே மாறியுள்ளது. இதற்கு ஏற்றார் போல் கடந்த மூன்று மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவை விடவும் 2 மடங்கு அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது ஏர்டெல். இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வாடிக்கையாளர் குறித்து வெளியிட்ட தரவுகள் அடிப்படையில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 14.6 லட்சம் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளது. ஆனால் ஏர்டெல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிலையன்ஸ் ஜியோவை விடவும் 2 மடங்கு அதிக வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளது தெரியவருகிறது. பார்தி ஏர்டெல் சுமார் 37.7 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது. ஜியோ உடன் நடக்கும் இந்தக் கடுமையான வணிகப் போட்டியில் ஏர்டெல் நிறுவனத்திற்கு இது மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. வோடபோன் ஐடியா இதே காலாண்டில் 46.5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்திய வணிகத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் பெரிய அளவிலான முதலீட்டைத் திரட்டி வரும் வோடபோன் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருவது சந்தையில் போட்டி தன்மையை அதிகளவில் குறைக்கிறது. ஜியோ உடனான போட்டியில் ஏர்டெல் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வோடபோன் ஐடியா வர்த்தகம் சரிவு பாதையை நோக்கி செல்ல தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் காலத்தில் இந்திய தொலைத்தொடர்புச் சந்தையில் இருமுனை போட்டியாக மட்டுமே இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 404.12 மில்லியன் வாடிக்கையாளர்கள் கொண்டு சுமார் 35.19விழுக்காட்டுச் சந்தை வணிகத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது. ஏர்டெல் 326.61 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு 28.44 விழுக்காட்டுச் சந்தையைக் கொண்டுள்ளது. வோடபோன் ஐடியா 295.49 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு 25.73 விழுக்காட்டுச் சந்தையைக் கொண்டுள்ளது. பாரத் சஞ்சார் நிகம் 10.35 விழுக்காட்டுச் சந்தையைக் கொண்டுள்ளது. ஏர்டெல்லின் சிறப்புக்களாக கருத்துக் கணிப்பில் அறியவருவது: முதலாவது சிறப்பு- மற்ற தொலைத் தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்களை ‘ரூ 598 க்கான 84 நாட்கள்’ சிப்பத்தில் அழைத்துப் பேச நேர எல்லையை வைத்து கொள்ளவில்லை ஏர்டெல். ஆனால் ஜியோவின் ‘ரூ 599 க்கான 84 நாட்கள்’ சிப்பத்தில் அழைத்து பேச 3000நிமிடங்களுக்கு மேலே போனால் அந்த அழைப்புகளுக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தியாக வேண்டும். கடந்த காலாண்டில் இந்த காரணங்களுக்காகவே ஏர்டெல் முதன்மைத் தேர்வுக்கானதாக அமைந்ததாம். இரண்டாவது சிறப்பு- இணைய வேகம் என்று தெரிவிக்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



