லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தின் மாணவரை 'தாலிபான்' என அழைத்ததற்கு கண்டனம் எழுந்ததை அடுத்து ஜக்கி வாசுதேவ் மன்னிப்புக் கோரியுள்ளார். 22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈசா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது அவரும் மாணவர் பிலாலும் உரையாடினர். அந்த உரையாடலின்போது ஜக்கி வாசுதேவ் பிலாலை பார்த்து, 'இவன் ஒரு பக்கா தாலிபான்காரன்' எனத் தெரிவித்ததாக காணொளி ஒன்று வெளியானது. இந்தக் காணொளிக்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் மாணவர் அமைப்பு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அத்துடன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஜக்கி வாசுதேவ் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் இந்தக் காணொளி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து விசயங்களும் காண்பிக்கப்படவில்லை. நான் 'தாலிபான்' என்ற சொல்லை மிகவும் உற்சாகமானவன் என்னும் பொருளில் கூறினேன். அந்தச் சொல்லை எந்த உள்நோக்கத்துடனும் தெரிவிக்கவில்லை. அதேபோல 'தாலிபான்' என்ற சொல்லுக்கு அரபு மொழியில் தீவிரமான மாணவர் என்று பொருள். இந்த நோக்கத்தில்தான் நான் விளையாட்டுத்தனமாக பிலாலை குறிப்பிட்டேன். இந்த விவகாரம் தொடர்பாக நான் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் மாணவர் அமைப்பு ஆகியவற்றிற்கு எனது மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். எனினும் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் மாணவர் அமைப்பு, இவ்விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் 'இந்தக் காணொளி எங்களால் திருத்தம் செய்யப்பட்டது அல்ல. இந்தியாவில் 'தாலிபான்' நல்ல பொருளில் உணரப்படுவதை நாங்கள் கேள்விப்பட்டதில்லை. சமூகத்தில் பெரிய இடத்திலுள்ள நபர்கள் இதுபோன்ற சர்ச்சைக்குரியப் பேச்சுகளை தவிர்க்க வேண்டும். அத்துடன் மதம் தொடர்பான கருத்துக்களை தவிர்க்க வேண்டும்' என பதிவிட்டுள்ளது. ஜக்கி வாசுதேவ்வின், தாலிபான் என்ற நையாண்டி- ஏன் பாதித்தது லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவன மாணவர்களை என்று தெரிந்து கொள்ள ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகம் அறிந்த ஒரு துயரச் செய்தி: பாகிஸ்தானிலுள்ள வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவாவின் புகழ்பெற்ற பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் அமைந்திருக்கிறது ராணுவ பொதுப்பள்ளி ஒன்று. ஏறக்குறைய 800 மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி அது. அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு காலை பொழுதில் பள்ளியின் முதலாவது வாயிலில் துணை ராணுவப் படையினரைப் போல உடையணிந்த தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 6 தற்கொலைப் படையினர் நுழைந்தனர். அவர்கள் நடத்திய குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஏறக்குறைய 132 பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 160 பேர் இதுவரை இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் மூன்று நாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டது. பள்ளி என்றோ குழந்தைகள் என்றோ கூட பாராமல் இந்த பயங்கர படுபாதகச் செயலை செய்திருக்கின்றனர். ஒரு மனிதனுக்குள்ளே உள்ளார்ந்த இயல்பாய் இருக்கும் சக மனிதன் குறித்த நேசம் இங்கே துளியளவு கூட இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த பயங்கர நிகழ்வு. அதே நேரத்தில் உலகில் இது முதல்முறையாகவும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் தூய இசுலாமிய கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என 2007-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இசுலாமிய தீவிரவாத இயக்கம் அவ்வப்போது சிறியதும் பெரியதுமான பல தாக்குதல்களை பொதுமக்கள் (முசுலீம்கள்) மீதும் ராணுவத்தின் மீதும் நடத்தியிருந்தாலும் இதுதான் இதுவரையிலான தாக்குதல்களில் பெரியது, கொடூரமானது. எட்டு மணி நேரம் வரை நீடித்த பயங்கரவாதத் தாக்குதல் இது. பாக் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து திருப்பி தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,113.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.