Show all

திராவிடர்கழகக் கூட்டத்தில் 'ஹிந்துத்துவா ஆதிக்கவாதிகளின் அப்பாவி அடிவருடிகள்' காலித்தனம்! வைகோ கண்டனம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூட்டத்தில் தாக்குதல் நடத்திய ஹிந்து முன்னணி கட்சியினருக்கு வைகோ கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக கூட்;டணி தேர்தல் கருத்துப்பரப்புதல் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, 'ஹிந்துத்துவா ஆதிக்கவாதிகளின் அப்பாவி அடிவருடிகள்' சிலர் உள்ளே நுழைந்து, மேடையை நோக்கி செருப்புகளை வீசியும், திராவிடர் கழகத்தினர் மீது கற்களை வீசியும் நடத்திய காலித்தனத் தாக்குதலில் இருவரின் மண்டை உடைந்து இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் காலித்தனத்தை கண்டிக்கும் முகமாக வைகோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் காண்பதாவது:

அண்ணன் கி.வீரமணி அவர்கள், 'சனாதன மதவெறி பாசிசத்தை இனியும் அனுமதித்தால் நாடு தாங்காது. குடிஅரசு புதைகுழிக்குப் போய்விடும்' என்று நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் மக்களிடம் கருத்துரை வழங்கி வருகிறார்.

கி.வீரமணி அவர்களின் தேர்தல் பரப்புரை, மதவெறி சக்திகளின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அதனை திசை திருப்பும் வகையில் உள்நோக்கத்துடன் வன்முறையைத் தூண்டிவிடும் முயற்சியில் சிலர் இறங்கி உள்ளனர்.

திராவிடர் இயக்கம் எதிர்ப்புக்களை உரமாக்கிக்கொண்டு வளர்ந்த பேரியக்கம். அச்சுறுத்தியோ, வன்முறைகளை ஏவியோ திராவிட இயக்கத்தின் தலைவர்களை முடக்கிவிட முடியாது என்பதுதான் நூறாண்டு கால வரலாறு.

திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் கி.வீரமணி அவர்கள் கால் சட்டை பருவம் தொட்டு அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் கரம் பற்றி நடப்பவர்.

கடந்த 70 ஆண்டு காலமாக பொதுவாழ்க்கையில் எத்தனையோ எதிர்ப்புகளையும், வன்முறை தாக்குதல்களையும், ஏன் உயிரையே போக்கக்கூடிய வகையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களையும் சந்தித்துதான், இடையறாது திராவிட இயக்கத்திற்காக, தமிழ்நாட்டின் உயர்வுக்காக, தமிழர்களின் நல்வாழ்வுக்காக தன்னலம் இன்றி தொண்டாற்றி வருகிறார்.

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகள் குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சமூக, மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவை.

ஆனால், அதே வேளையில் மதத்தின் பெயரால் ரத்தக் களறி ஏற்படுத்தி, மக்களிடையே பிளவுகளை உருவாக்கி, வன்முறை வெறியாட்டம் போடும் ஆதிக்க சக்திகளை வேரறுக்க வேண்டும் என்பதைத்தான் ஜனநாயக முற்போக்கு சக்திகள் தமிழக மக்களிடம் எடுத்துரைத்து வருகின்றன.

அந்த வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது தாக்குதல் நடத்த முனைந்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்! என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,114.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.