Show all

வியக்கவைக்கும் இஸ்ரேல்! கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்காத நாள் இன்று இஸ்ரேலுக்கு

தடுப்பூசி செலுத்தும் தொடர் நடவடிக்கைகளால், ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், அவர் சந்திக்கும் பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதில்லை என்கிற நிலைக்கு இஸ்ரேல் நோயெதிர்ப்பு நிலையைக் கட்டமைத்துள்ளது. 

12,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இஸ்ரேலில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அதிவேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையால், கடந்த பத்து மாதங்களில் முதல் முறையாக ஒரு நாளில் இஸ்ரேலில் கொரோனாவால் ஒருவர் கூட இறக்கவில்லை என தரவுகள் வெளியாகி இருக்கின்றது. 
 
இஸ்ரேல் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை, மாற்றமின்றி கடந்த வியாழக்கிழமை 6,346 ஆகவே இருப்பதாக அந்நாட்டின் நலங்கு அமைச்சகத் தரவுகள் கூறுகின்றன.

இப்படி இஸ்ரேல் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் இறக்கவில்லை என கடைசியாக கூறியது, பத்து மாதங்களுக்கு முன்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆண்டில் கொரோனா உச்சத்தைத் தொட்டு, தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.

ஒரு மாத காலத்துக்குப் பிறகு, கொரோனா தடுப்பூசி அதிக அளவில் மக்களுக்குச் செலுத்தப்பட்டபின், இஸ்ரேல் அரசு கொரோனாவை முன்னிட்டு விதித்த ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தத் தொடங்கியது.

உலக அளவில், அதிக அளவில் தன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டிருக்கும் நாடு இஸ்ரேல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் நாட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 90 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஐம்பது இலட்சம் பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக கடந்த வியாழக்கிழமை கூறப்பட்டது.

இஸ்ரேலின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமாராக 56 விழுக்காட்டு பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி இரண்டு தடவைகளும் செலுத்தப்பட்டுவிட்டதாக அந்நாட்டின் நலங்கு அமைச்சகம் கூறியுள்ளது.

இது இஸ்ரேல் நாட்டின் நலங்கு அமைப்பும், இஸ்ரேல் நாட்டு மக்களும் செய்த மிகப் பெரிய சாதனை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா நுண்நச்சை ஒழிப்போம் என இஸ்ரேல் நலங்குத்துறை அமைச்சர் யுலி எடெல்ஸ்டெய்ன் கடந்த வெள்ளிக்கிழமை கீச்சுப் பதிவிட்டிருந்தார். 

இஸ்ரேல் சமூக நோயெதிர்ப்பு நிலையை நோக்கி மிக நெருக்கமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என, இஸ்ரேலின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான தி சிபா மருத்துவ மையத்தின் இயக்குநர் இயால் லெசெம் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தொற்றுக்கு எதிராக, ஒட்டுமொத்த மக்கள் நடுவே போதுமான பாதுகாப்பு இருக்கும் போது, சமூக நோயெதிர்ப்பு நிலை உருவாகும். அது நோய் தொற்று பரவுவதைத் தடுக்கும். இந்த மாதிரியான சமூக நோயெதிர்ப்பு நிலையை அடைவதற்கு உலக மக்கள் தொகையில் 65லிருந்து 70 விழுக்காட்டு பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உலக நலங்கு அமைப்பு கூறியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையிலும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதற்கு, சமூக நோயெதிர்ப்பு நிலை மட்டுமே ஒரே காரணமாக இருக்கும் என கூறியுள்ளார் லேசெம்.

ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், அவர் சந்திக்கும் பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதில்லை என்கிற நிலைக்கு இஸ்ரேல் நோயெதிர்ப்பு நிலையைக் கட்டமைத்துள்ளது. 

இஸ்ரேல் நாடு பதினேழு மாதங்களுக்கு முன்பே கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியைத் தொடங்கியது. அப்போதிலிருந்து தன் நாட்டில் உள்ள மக்களுக்கு விழுக்காட்டு அடிப்படையில், அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் நாடாக முன்னிலை வகித்து வருகிறது.

தொடக்கம் முதலே இஸ்ரேல் பைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை மட்டுமே செலுத்தி வருகிறது.

பைசர் தயாரித்த தடுப்பூசியின் இரண்டு தடவைகளையும் செலுத்திக் கொண்டவர்கள், கொரொனாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 95.8 விழுக்காடு குறைந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, இஸ்ரேலின் நலங்கு அமைச்சகம் குறிப்பிடுகிறது,

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கழகம் தடுப்பூசியை குழந்தைகளுக்குச் செலுத்த அனுமதி கொடுத்த உடன், தங்கள் நாட்டிலுள்ள 12- 15 அகவை சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது இஸ்ரேல்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.