Show all

வட இந்திய ஊடகங்கள் கொண்டாடும் தமிழகம்! மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்புக்காக

இந்தியாவிலேயே வலிமையான மருத்துவக் கட்டமைப்புக்கு நீங்கதான் மிகச்சிறப்பு என்று- தமிழகம், கேரளாவைப் புகழ்ந்து தள்ளுகின்றன வட மாநில தொலைக்காட்சிகள். உங்க ஆளுங்க நீட் வெச்சு, எங்க தமிழகத்த மருத்துவக் கல்விக்குப் புறக்கணிச்சப்ப, எங்கப்பா போனிங்க? என்று தமிழக இணைய எழுத்தாளர்கள் தகுதியுள்ள தமிழகம்- காங்கிரஸ் மற்றும் பாஜக வடஇந்தியத் தலைமைகளின் ஆட்சிகளால் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டித் தெளிவூட்ட முனைந்து வருகின்றனர்.  

13,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவிலேயே வலிமையான மருத்துவக் கட்டமைப்புக்கு நீங்கதான் மிகச்சிறப்பு என்று தமிழகம், கேரளாவைப் புகழ்ந்து தள்ளுகின்றன வட மாநிலத் தொலைக்காட்சிகள். தமிழகம், கேரள மாநிலங்கள் வட மாநிலங்களை விட சிறந்த மருத்துவ கட்டமைப்புகளைக் கொண்டுள்ளதாக வட மாநில தொலைக்காட்சிகள் பாராட்டி வருகின்றன. 

இந்தியா முழுவதும் கொரோனாவின் முகம் மீண்டும் மக்களை படுத்தி எடுத்து வருகிறது. உலக நாடுகள் எங்கிலும் இல்லாத வகையில் அன்றாடம் 3,00,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாட்டில் கொரோனா நோயாளிகள் அன்றாடம் பெருகி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முதன்மையாகப் பயன்படும் உயிர்வளிக்கு பற்றாக்குறை, கட்டாயத்தேவை மருந்துகளுக்கு தட்டுப்பாடு என்று இந்தியா ஒரு நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. 

உயிர்வளி தேவைப்படும் இடங்களுக்கு இந்திய விமானப்படை விமானம் மூலமும், தொடர்வண்டிகள் மூலமும் உயிர்வளி கொண்டு தரும்பணியை முடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி இல்லை. இது தவிர உயிர்வளி இல்லாமல் ஏராளமான நோயளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். 

வடக்கின் பல்வேறு மாநிலங்கள் கொரோனா 2-வது அலையை சரியாக கணித்து திட்டமிடாததோடு, தமிழகம் போல வலிமையான மருத்துவக் கட்டமைப்பை கொண்டிராமையே, இந்த மோசமான பேரழிவுக்கு காரணம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் தென் மாநிலமான தமிழகம் எப்போதும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளதால், கொரோனா 2-வது அலையை கண்டு தமிழகம் அஞ்சத் தேவையில்லை என்கிற நிலையைக் காணமுடிகிறது என்று பாராட்டுகின்றன வடமாநிலத் தொலைக்காட்சிகள்.

தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு இல்லை. மேலும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் உயிர்வளித் தட்டுப்பாடும் இல்லை. ஏனெனில் தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் உயிர்வளி உற்பத்தி செய்யும் கட்டமைப்பு முன்பே ஏற்படுத்தப் பட்டுள்ளது.

சென்னையில் 75விழுக்காடு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பி விட்ட நிலையில் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். காய்ச்சல் அதிகம் இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் அறிவித்ததால் மருத்துவமனைகளில் கூட்டம் கூடுவதும் தவிர்க்கப்பட்டது. அங்கு இருக்கும் நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. 

வட மாநிலங்களில் மக்கள் சிகிச்சைக்காக சாலையில் படுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் இந்த மேலாண்மை அமைப்பு மிகவும் முதன்மைத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தமிழகம் கொரோனா 2-வது அலையை சிறப்பாக கையாண்டுள்ளது என்று வட மாநில தொலைக்காட்சிகள் தமிழகத்தை வடமாநிலங்களோடு ஒப்பிட்டு பாராட்டி வருகின்றன. 

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்புகள் மிக மோசமாக இருக்கும் என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. தற்போது இந்த நிலையைதான் வடமாநிலங்கள் பிரதிபலித்து வருகின்றன என்பது குறிப்பிட்டத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.